

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை 3 மாத காலம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 27 முதல் 2021 ஜனவரி 19-ம் தேதிவரை இந்திய அணி ஆஸி.யில் பயணம் மேற்கொள்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த மாதம் 26-ம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால், அந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதையடுத்து, அணி திருத்தப்பட்டு புதிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று (நவ. 09) அறிவித்தது.
இதன்படி, தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி, டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 10), இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடத் தேர்வாகியுள்ள தமிழக வீரர் நடராஜனைத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் நடராஜனுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நடராஜனைத் தொடர்புகொண்டு பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளைப் பெறவும், வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்குப் பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்.
நடராஜனின் அனைத்துக் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.