Published : 10 Nov 2020 01:12 PM
Last Updated : 10 Nov 2020 01:12 PM

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்; கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட அதன் இயல்பான வடிவிலேயே விரைந்து நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தினைக் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட அதன் இயல்பான வடிவிலேயே விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக உள்கட்டமைப்பின் உன்னதச் சிற்பியாக விளங்கிய கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றன.

1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட 19 கி.மீ. தொலைவினைக் கனரக வாகனங்கள் அரை மணி நேரத்திற்குள்ளாகக் கடந்து, துறைமுகத்தினை அடைய முடியும் என்பதால் ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் சேர்த்தே அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா காழ்ப்புணர்வு காரணமாக, பறக்கும் சாலைப் பணியினை முடக்கிப் போட்டார். அவர் முன்வைத்த காரணங்கள் பொருந்தாதவை என்பதை ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளும் தெரிவித்தன.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்பணி விரைவுபடுத்தப்படும் என அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்த பிறகு, இதனை 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பறக்கும் சாலை மேம்பாலத்திற்காக ஏற்கெனவே தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் என்பது இதன் கட்டுமானத்தை முற்றிலும் மாற்றி அமைத்து, குலைக்கின்ற மேலும் அபரிமிதமான காலதாமதம் ஏற்படுத்தும் அறிவிப்பாகும். அத்துடன், போகாத ஊருக்கு வழியைக் காட்ட நினைக்கிறது, டெண்டர் ஊழலுக்காகவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் பழனிசாமி அரசு.

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டும் தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தினை அதன் இயல்பான வடிவிலேயே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் தலைமையில் திமுகவினர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியபடி, பறக்கும் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், அதனை விரைந்து நிறைவேற்றுகிற காலம் வேகமாக வருகிறது என்ற நிலைமையைப் பொதுமக்கள் நன்கு அறிவார்கள்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x