Published : 06 Oct 2015 08:05 AM
Last Updated : 06 Oct 2015 08:05 AM

அக்.8-ல் திட்டமிட்டபடி ஜாக்டோ சார்பில் வேலைநிறுத்தம்: 3.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு

ஜாக்டோ அமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 3.5 லட்சம் ஆசிரியர்கள் கலந்து கொள் கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் 24 சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆசிரியர் சங்கங்களும் அடங்கும்.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது, 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

ஜாக்டோ சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அறிவித்துள்ளார். இதேபோல், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரமும் தங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். இதேபோல், இதர முன்னணி ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித் துள்ளனர்.

நிர்வாகி விளக்கம்

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு உறுப் பினரும், முதுகலை பட்டதாரி ஆசி ரியர் கழக மாநிலத் தலைவருமான கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், “வேலைநிறுத்தம் குறித்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்று எதிர்பார்த்தோம். இதுவரை அரசிடமிருந்து அழைப்பு இல்லை. எனவே, திட்டமிட்டபடி அக்டோபர் 8-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3.5 லட்சம் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x