Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸில் இணைந்தார்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நேற்று காங்கிரஸில் இணைந்தார். உடன் காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி.படம் க.பரத்

சென்னை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், காங்கிரஸில் இணைந்தார்.

தமிழக இளைஞரான சசிகாந்த்செந்தில் 2009-ல் கர்நாடகாவில் ஐஏஎஸ் பணியை தொடங்கினார். துணை ஆட்சியர், ஆட்சியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 2019 செப்டம்பர் 6-ம் தேதி ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். அதன்பிறகு பல்வேறு மக்கள் நல போராட்டங்களில் பங்கேற்றார்.

சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், காங்கிரஸில் இணைய முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று பகல் 12.30மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மேலிடபொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் சசிகாந்த்செந்தில் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,மாநில ஊடக பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்.சி. பிரிவுமாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காஞ்சி வடக்கு மாவட்டதலைவர் ரூபி மனோகரன், மகளிர்அணி தலைவர் சுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சசிகாந்தை வரவேற்றுப் பேசிய தினேஷ் குண்டுராவ், ‘‘மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால் நாடு மிக மோசமான காலகட்டத்தில் இருக்கும்போது சசிகாந்த் செந்தில் போன்ற இளைஞர்கள் காங்கிரஸில் இணைந்திருப்பது தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தும்’’ என்றார்.

சசிகாந்த் செந்தில் கூறியபோது, ‘‘வெறுப்பு அரசியல்தான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. அதற்கு முடிவுகட்ட அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்களுக்கான கட்சியாக காங்கிரஸை மாற்ற எனது பங்களிப்பை தருவேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x