Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

பள்ளிகள் திறப்பு கருத்துகேட்பில் பெற்றோரின் ஆதரவும், எதிர்ப்பும்: பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை குறைக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதிதிறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறுதரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட தால், பெற்றோரிடம் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

கோவை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதுடன், கிருமிநாசினி யும் வழங்கப்பட்டன. சமூக இடை வெளியுடன் கூட்டம் நடைபெற்றது.

காலை 10 முதல் மதியம் 12 மணி வரை பெற்றோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு கருத்து கேட்பு படிவம் வழங்கப்பட்டது. அதில், மாணவரின் பெயர், பெற்றோர் பெயர், அலைபேசி எண் மற்றும்பள்ளியை வரும் 16-ம் தேதிதிறக்கலாம் அல்லது ஒத்திவைக் கலாம், பிளஸ் 2, 10-ம் வகுப்பை திறக்கலாம், பிளஸ் 2 வகுப்பு மட்டும் திறக்கலாம், 10-ம் வகுப்பு மட்டும் திறக்கலாம் என பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் பெற்றோர் தங்களது கருத்துகளை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் அம்மணி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடை பெற்ற கூட்டங்களில் பங்கேற்ற பெற்றோரில் சிலர் கூறும்போது, “நவ. 16-ல் பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவை எதிர்க்கிறோம். கரோனா தொற்று குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை கூறுகிறது. கேரள மாநிலத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, ஓணம் பண்டிகைக்கு பிறகு அதிகரித்துள்ளது. இந்த அசாதாரணச் சூழலில் பள்ளிகளைத் திறப்பது சரியானதாக இருக்காது’’ என்றனர்.

சில பெற்றோர் கூறும்போது, “10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்களை வரவழைக்கலாம்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 158 அரசு உயர்நிலைப் பள்ளி, 21 அரசு நிதி உதவிபெறும் பள்ளி, 155 மெட்ரிக் பள்ளி, 20 சுயநிதிப் பள்ளி, 47 சி.பி.எஸ்.இ. பள்ளி என 401 பள்ளிகளில், கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடந்த கருத்துகேட்புக் கூட்டத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தார்.

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 1256 பேர் பங்கேற்றனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு செய்து, இந்த படிவம் மற்றும் கருத்துகேட்புக் கூட்டம் தொடர்பாக பெற்றோருக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர், அவர் கூறும்போது, "அரசு வழிமுறைகளின்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 401 பள்ளிகளில் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. பெற்றோர் தெரிவித்த கருத்துகள் படிவம் மற்றும் வீடியோ மூலமாக பதிவு செய்யப்பட்டது. படிவங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடப்படும். திருப்பூர் மாவட்டத்தில் பதிவான கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்பின், பள்ளி திறப்பது தொடர்பான அறிவிப்பை அரசு முடிவு செய்யும்" என்றனர்.

பெற்றோர் கூறும்போது, "மழைமற்றும் பனி அதிமாக உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் கரோனாதொற்று அதிகம் பரவ வாய்ப் புள்ளது. எனவே, பள்ளிகளை தற்போது திறக்கக்கூடாது. அப்படியே திறந்தாலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வரமாட்டார்கள். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் அரசு உரிய பாதுகாப்புடன் பள்ளிகளை திறக்கலாம். இல்லையெனில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க வேண்டும். வரும் ஆண்டில் நீட் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பாடத் திட்டங்களை குறைக்கும் பணியை அரசு செய்ய வேண்டியது அவசியம்" என்றனர்.

பள்ளிக்கு சென்றால்தான் படிப்பார்கள்;

3 மாதங்களில் படிப்பு ஒன்றும் ஆகிவிடாது

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகளில் பெற்றோருடன் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில், அவர்களிடம் அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட படிவத்தில் பள்ளிகளை திறக்க சம்மதத்தை தெரிவிப்பதற்கும், சம்மதம் இல்லாவிடில் அதை பதிவுசெய்து அதற்கான காரணத்தை குறிப்பிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

சென்னை பள்ளிகளில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சில பெற்றோர் கூறும்போது, "மாணவர்களின் படிப்பு முக்கியம். தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லக்கூடிய குடும்பங்களில் குழந்தைகளை வீட்டில் பராமரிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. 8 மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால், குழந்தைகள் மிகவும் தொல்லைப்படுத்துகிறார்கள், ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் முழுமையாக கலந்துகொள்வதில்லை. பள்ளிகளுக்கு சென்றால்தான் அவர்கள் படிப்பார்கள். எனவே, 16-ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்" என்றனர்.

அதே நேரத்தில் வேறு சில பெற்றோர் கூறும்போது, "படிப்பைவிட குழந்தைகளின் உயிர்தான் முக்கியம். பள்ளிகள் திறக்கப்பட்டு கரோனா பரவி ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பேற்பது, ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறந்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு வந்ததை பார்த்துவிட்டோம். கரோனா 2-வது அலை வரும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்கள். மழைக்காலமும் வந்துவிட்டதால், 2 மாதங்களோ, 3 மாதங்களோ கழித்து பள்ளிகளை திறந்தால் படிப்பு ஒன்றும் ஆகிவிடாது. ஏற்கெனவே 8 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னொரு 2 மாதங்கள் அவ்வளவுதான். எனவே, 16-ம் தேதி பள்ளிகளை திறக்கக்கூடாது" என்கின்றனர்.

ஆதரவும், எதிர்ப்பும் சமமாக இருக்கும்பட்சத்தில், அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x