Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

தீபாவளி பட்டாசு விபத்து முன்னெச்சரிக்கையாக தீக்காயங்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு: டீன் வசந்தாமணி தகவல்

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்ககீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கசென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் சிறப்பு தீக்காய வார்டை மருத்துவமனை டீன் வசந்தாமணி அமைத்துள்ளார். 10 படுக்கைகள் கொண்டஇந்த வார்டில் 3 டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டீன் வசந்தாமணி கூறியதாவது: பெரியவர்கள் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது நல்லது. செருப்பு அணிய வேண்டும். அருகில் ஒரு வாளி தண்ணீர் இருக்க வேண்டும். பட்டு, நைலான் துணிகளையும், நீளமான உடைகளையும் அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்த நீண்ட மத்தாப்பு அல்லது ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

திறந்த காற்றோட்டமான இடத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ராக்கெட் போன்ற பட்டாசுகளை நேர்நிலையில் வைத்துதான் வெடிக்க வேண்டும். வெடித்த பட்டாசு குச்சிகளை ஒருமண் நிறைந்த வாளியில் போட வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. செல்லப் பிராணிகள் அருகிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

பட்டாசுகளை கையில் வைத்து பற்ற வைக்கக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசில் உள்ள மருந்தை எடுத்து பற்ற வைக்கக்கூடாது. பட்டாசுகள் நிறைந்த பையை பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. கால்சட்டை பாக்கெட்டில்பட்டாசுகளை வைத்துக் கொண்டு பட்டாசு வெடிக்கக் கூடாது. காலிபெட்டிகள் அடியில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

தீக்காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை நீரில் வைத்திருக்க வேண்டும். ஐஸ்கட்டி வைக்கக்கூடாது. மஞ்சள், காப்பிதூள், மை, மாவு போன்றவற்றை தீப்புண் மேல் போடக்கூடாது. ஒட்டியிருக்கும் எரிந்த துணையை வெட்டி எடுக்க வேண்டும். கொப்பளங்களை உடைக்கவோசுயமாக மருத்துவமோ செய்யக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x