சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வைகோ வலியுறுத்தல்

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

நலிவடைந்து வரும் சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு தொழிலுக்குப் பெயர் பெற்ற ஊராகும். இந்திய நாட்டின் 80 சதவிகித பட்டாசு தேவையை சிவகாசி வட்டாரத்தில் உற்பத்தியாகும் பட்டாசுகள் நிறைவேற்றுகிறது. சீனப் பட்டாசு இறக்குமதியால் , தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதரம் அழியும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

சீனப் பட்டாசு இறக்குமதிக்கு பெயரளவுக்கு மட்டுமே தடை உள்ளது. வேறு பொருட்களின் பெயரில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களில் இரண்டாயிரம் கண்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் இரண்டாயிரம் கண்டெய்னர் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நம் நாட்டில் பட்டாசு தயாரிப்பிற்கு அரசு நிர்ணயித்துள்ள தரச் சான்று எதுவும் சீனப் பட்டாசுக்கு இல்லை. அந்தப் பட்டாசைப் பயன்படுத்தும் போது ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

துறைமுகங்கள் வழியாக மாற்றுப் பெயரில் கப்பல்களில் வரும் பட்டாசுகளை தடுத்து நிறுத்தி, அதற்குத் துணை செல்பவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, கடமையை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

சீனப் பட்டாசு இறக்குமதியால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 35 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டு, பட்டாசு தொழில் நலிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. தற்சமயம் நூறு பட்டாசு ஆலைகள் விற்பனை வாய்ப்புகளை இழந்து மூடப்பட்டுள்ளன. பட்டாசு வணிக முகவர்கள், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், நுகர்வோர் என அனைத்துத் தரப்பினரும் இதனால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் ஈட்டித் தரும் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பகுதி தனது சிறப்புகளையும், பெருமைகளையும் இழந்துவிடும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனப் பட்டாசு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பான முறையில் செயல்படுத்தி, நலிவடைந்து வரும் சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க மத்திய -மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிவகாசியின் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in