

புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமை செயலர், பொதுப் பணித்துறை செயலர் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு இல்லங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் இல்லங்களை சீரமைத்த செலவினங்கள் குறித்து கடந்த 2018 ஜனவரி 10ம் தேதி தகவல் கேட்டதற்கு, துய்மா வீதியில் உள்ள அரசு இல்லம் நெடுங்காடு எம்எல்ஏ சந்திரபிரியங்கா பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செலவினங்கள் பின்பு அளிக்கப்படும் என பொதுப்பணித்துறையின் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பிரிவு மத்திய கோட்டத்தினர் தகவல் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அமைச்சர்களின் அலுவலகங்கள், இல்லங்கள் ஆகியவற்றிற்கு செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து தகவலாக கேட்டதற்கு, அவர்கள் 2016ம் ஆண்டே துய்மா வீதியில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வசிக்கும் இல்லத்தை ரூ.12,40,000 லட்ச ரூபாய் செலவு செய்து சீரமைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
பொதுப்பணித்துறையினர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதியன்று நெடுங்காடு எம்எல்ஏ பயன்பாட்டில் உள்ளது என்று கூறிவிட்டு, அவர்களே அந்த இல்ல சீரமைப்பு செலவின தகவலில் சமூக நல அமைச்சர் இல்லம் என்று கூறியுள்ளனர். அப்படியெனில் அந்த இல்லத்தில் யார் தான் குடியிருந்து வருகிறார்கள்.
சமூக நலத்துறை அமைச்சர் இல்லத்தில் 8 ஐஆர்பிஎன் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளதாக ஐஆர்பிஎன் கமாண்டன்ட் தகவல் அளித்துள்ள நிலையில், அந்த இல்லத்தை பார்க்கும் போது எவரும் குடியிருப்பதற்கான முகாந்திரமே இல்லாதது போல் உள்ளது. மேலும், அந்த இல்லத்திற்கு 2016ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதிக்கு பின் மின் கட்டணமே செலுத்தவில்லை எனவும், ஆகஸ்ட் 2020 வரை அந்த இல்லத்திற்கு ரூ.2,48,845 மின் கட்டணம் நிலுவை உள்ளதாக மின்துறையினர் கூறியுள்ளனர். இந்த தொகையினை நெடுங்காடு எம்எல்ஏ செலுத்துவாரா? அல்லது அமைச்சர் செலுத்துவாரா?
சட்டமன்ற உறுப்பினர் அந்த இல்லத்தில் குடியிருக்கும் பட்சத்தில் எம்எல்ஏவுக்கு அரசு இல்லம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அமைச்சர் ஒருவர் குடியிருக்காத அரசு இல்லத்தை பல லட்சம் செலவு செய்து சீரமைக்க வேண்டிய அவசியம் என்ன? இதனை சீரமைக்க ஆணையிட்ட அதிகாரி யார்? எந்த நிதியில் இருந்து சீரமைக்கப்பட்டது என இதன் உண்மை தன்மையினை கண்டறிந்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.