

சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி போலீஸாரை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த ஏ.அம்மாசி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘எங்கள் கிராம ஏரியில் தண்ணீர் இல்லை என்று வட்டாட்சியர் வழங்கிய தவறான அறிக்கை அடிப்படையில், ஏரியில் கிராவல் மண் அள்ள கார்த்திக் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் உரிமம் வழங்கினார். நிர்ணயித் ததைவிட அவர் அதிக மணல் அள்ளியதால், நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. ஏரியில் மணல் அள்ள ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், ஏரியில் மண் அள்ளப்பட்டது குறித்து ஆய்வு செய்த மண்ணியல் துறை இயக்குநர் எம்.கந்தன், அறிக்கை தாக்கல் செய்தார். ‘‘ஒப்பந்ததாரர் கார்த்திக் 1,350 லோடுகளுக்கு அனுமதிச் சீட்டு பெற்றுள்ளார். அனுமதிச் சீட்டு இல்லாமல் 1,529 லோடு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு அவருக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதிய தண்டவாளப் பணிக்காக மாதேஷ் என்ற ஒப்பந்ததாரர் 1,738 லோடு மணல் அள்ளியது கண்டுபிடிக் கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:
மானத்தாள் கிராம ஏரியில் எந்த அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருக்கிறது என்பது ஆய்வு அறிக்கை மூலம் தெரிகிறது. அதிகாரிகள் துணையின்றி, ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளி இருக்க முடியாது. இதுதொடர்பாக மணல் குவாரியை மேற்பார்வை செய்யும் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. அவர் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒரு நாளில் 280 மணல் குவாரிகளுக்கு தடையில்லாச் சான்று வழங்குகிறது. சராசரியாக, 3.40 நிமிடத்தில் ஒரு குவாரிக்கு சான்று வழங்கப்படுகிறது’ என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மானத்தாள் ஏரியில் இனி மணல் அள்ளக் கூடாது. மண்ணியல் இயக்குநரின் ஆய்வு அறிக்கையை எதிர் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடப்பதாக கூறப்படும் மணல் குவாரி முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். மானத்தாள் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாதேஷ், அதிகமாக மணல் அள்ளிய கார்த்திக், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் அள்ள உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கலாம். இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை அடுத்த விசாரணையின்போது போலீஸ் அதிகாரி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.