

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைவரையும் பாதிக்கக்கூடிய முறையில் விலைவாசி வரலாறு காணாத முறையில் உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நியாமான விலையில் தரமான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டும் என்பதே.
தேர்தல் காலங்களில் விலைவாசியை குறைப்போம் என்கின்ற வாக்குறுதிகள் தான் முதன்மையான முழக்கமாக, இடம் பெறும். தேர்தல் முடிந்த நிலையில் அதனைப்பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத போக்கே நீடித்து நிலைந்து வருகின்றது. துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பயிறு என அனைத்தும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்க்கு உயர்ந்துள்ளது.
உற்பத்தி குறைவு என்பது மட்டுமல்ல ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் விலை உயர்வுக்கு மிக முக்கிய பங்களிப்பை செய்கின்றது. பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்துள்ளது.
உற்பத்தி பாதிப்பு என்பது அரசுக்கு நன்கு தெரிந்த ஒன்றே, அதற்கேற்ப பற்றாக்குறை உணவுப் பொருள்களை கொள்முதல் செய்து விலை ஏற்றம் ஏற்படாமல் தடுத்திட வேண்டிய தார்மீக பொருப்பும் கடமையும், மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு, வரும் முன் காப்பதுதான் அரசின் கடமையாகும்.
மதுபான கடைகளில் தட்டுப்பாடின்றி சரக்குகள் இருப்பு வைக்க வேண்டும், விற்பனை குறையக்கூடாது என அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கும் அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் போதுமான அளவிற்கு நியாயவிலை கடைகளில் இருப்பு உள்ளதா என்பதனை கண் காணிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட, நியாயவிலை கடைகள் மூலம், பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பண்டங்களும் நியாயவிலையில் தட்டுப்பான்றி கிடைத்திட, போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.