

மதுரையில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வந்த நகைக் கடனுக்கான வட்டி விகிதத்தை (விளிம்பு தொகை) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குறைத்துள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் 198 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் 90 சதவீத வருவாய் நகைக் கடன்கள் மூலம் கிடைக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி மதிப்பிற்கு நகைக் கடன் வழங்கப்படுகிறது.
இதற்காக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு சங்கங்களுக்கு 2.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டது. தற்போது அந்த வட்டி விகித தொகையை 1.75 சதவீதமாக மத்திய கூட்டுறவு வங்கி குறைத்துள்ளது. இந்த உத்தரவால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் வட்டி வருவாய் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் அனைத்து பணியாளர் சங்க செயலாளர் ஆசிரியதேவன் கூறியதாவது:
நகைக் கடன்கள் மூலம் கிடைக்கும் வட்டித் தெகையை வைத்தே பணியாளர் சம்பளம் உள்ளிட்ட சங்கங்களின் அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும் போது வட்டித் தொகை குறைப்பது சரியல்ல. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட சில மத்திய கூட்டுறவு வங்கிகள் 3 சதவீத வட்டி விளிம்பு வழங்கி வருகிறது. இதனால் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் வட்டி குறைப்பு உத்தரவை திரும்ப பெற்று குறைந்தபட்சம் ரூ.2.50 சதவீத வட்டி விளிம்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முற்றுகை போராட்டம்:
வட்டி விளிம்பு தொகை குறைப்பை கைவிடக்கோரி மதுரை மாவட்ட வேளாண் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தை இன்று சுமார் 2 மணி நேரம் முற்றுகையிட்டனர்.
மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாண்மை இயக்குனர் ஜீவாவிடம், சங்க நிர்வாகிகள் ஆசிரியதேவன், ராஜா, கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கோரிக்கை தொடர்பாக நவ. 11-ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டுறவு சங்கச் செயலர்கள் கலைந்து சென்றனர்