Last Updated : 09 Nov, 2020 07:31 PM

 

Published : 09 Nov 2020 07:31 PM
Last Updated : 09 Nov 2020 07:31 PM

கோவை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ பகுதிகளாக வகைப்படுத்திய காவல்துறையினர்

கோவை மாநகரில் அதிக அளவில் விபத்து ஏற்படும் இடங்களில், 15 இடங்கள் கண்டறியப்பட்டு, அவை பிளாக் ஸ்பாட் இடங்களாகக் காவல் துறையினரால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் ஒன்றாக உள்ள கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மாநகரில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தடுக்கவும் மாநகரக் காவல்துறையினர் சார்பில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, மாநகரின் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநகரில் பதிவாகும் விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் காவல்துறையினர் மாநகர் முழுவதும் ஆய்வு செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகரில் பதிவான விபத்துகள், விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அது நிகழ்ந்த பகுதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.

அதன்படி, மாநகரில் அதிக அளவில் விபத்து ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ இடங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். அந்த இடங்களில் விபத்துகளைக் குறைக்க அரசுத் துறைகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

மாநகரக் காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2018-ம் ஆண்டு 149 உயிரிழப்பு விபத்துகள், 987 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள், 2019-ம் ஆண்டு 126 உயிரிழப்பு விபத்துகள், 936 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள், நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை 52 உயிரிழப்பு விபத்துகள், 494 உயிரிழப்பற்ற சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

15 பிளாக் ஸ்பாட்கள்

இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் முத்தரசு இன்று (9-ம் தேதி) கூறும்போது, ''அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பு, ஹோப்காலேஜ், கே.எம்.சி.ஹெச் சந்திப்பு, சிட்ரா, கோல்டு வின்ஸ், திருச்சி சாலையில் வசந்தாமில் சந்திப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, கிளாசிக் டவர் சந்திப்பில் இருந்து உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை இணையும் பகுதி, போத்தனூர் பொங்காளியம்மன் கோயில் சாலை, ஜி.டி.டேங்க் ஏரியா, மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட், அழகேசன் சாலை, சத்தி சாலையில் காந்திபுரம், சரவணம்பட்டி அருகேயுள்ள தனியார் மால் வளாகம் சந்திப்பு ஆகிய இடங்கள் அதிக அளவில் உயிரிழப்பு, உயிரிழப்பற்ற விபத்துகள் ஏற்படும் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மாநகரக் காவல்துறையினர், வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்த உள்ளோம். அங்கு விபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்து, அங்கு அத்திட்டம் செயல்படுத்தப்படும். ஓரிரு நாளில் இந்த ஆய்வு தொடங்கப்பட உள்ளது.

மேலும், மேற்கண்ட இடங்களில் தடுப்புச் சுவர்களின் உயரம் குறைவாக இருப்பதால், அதன் மீது ஏறிச் சாலையைத் தாண்டுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் தடுப்புச் சுவர்களின் மீது 3 அடி உயரத்துக்குத் தடுப்புக் கம்பங்கள் அமைக்கப்படும். விபத்துகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x