

தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் மீது தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார் அளித்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொருளாளர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் வர்க்கீஸ், பாக்கியராஜ், எஸ்ரா உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
அதில், “சென்னை நங்கநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் ஸ்ரீதர் காவல்துறை குறித்தும், தமிழக முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் கட்சித் தலைவர்கள் தொல்.திருமாவளவன், மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் ஆகியோர் குறித்தும் அவதூறாகப் பேசியதுடன், தொல்.திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தை வெடிகுண்டு வீசி தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்துக்கள் அல்லாதோரை அவதூறாக பேசியுள்ளார்.
மேலும், இந்திய பிராமண மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதனும் அரசியல் கட்சித் தலைவர்களை ஆபாசமாக பேசியுள்ளார்.
அனுமன் சேனா நிர்வாகி பத்மஜா முருகையன் மத கலவரத்தை தூண்டும் வகையிலும், சிறுனான்மையினருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.