Published : 09 Nov 2020 06:28 PM
Last Updated : 09 Nov 2020 06:28 PM

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை: கேரள வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்தது

ஒட்டன்சத்திரம் 

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு நடந்த விற்பனையில், வெளி மாநில வியாபாரிகள் வராததால் கடந்த ஆண்டைவிட விற்பனை வெகுவாகக் குறைந்தது.

மாடுகளுக்கும் போதிய விலையும் கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டுவந்த மாடுகளை விவசாயிகள் திரும்ப அழைத்துச்சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு விற்கு பின் சில வாரங்களுக்கு முன்பே மீண்டும் சந்தை செயல்படத்தொடங்கியது.

சந்தை தொடங்கியது முதல் கரோனா பாதிப்பு காரணமாக போதிய விற்பனை இல்லாதநிலையே காணப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 கோடி வரை மாடுகள் விற்பனையானது.

இந்த ஆண்டு விற்பனை இதேபோல் இருக்கும் என நினைத்து விவசாயிகள், வியாபாரிகள் பலர் நேற்று காலை தொடங்கிய மாட்டுச்சந்தைக்கு மாடுகளை கொண்டுவந்தனர்.

சந்தை தொடங்கியது முதல் கன்றுகுட்டிகள் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும்,

பசுமாடுகள், நாட்டுமாடுகள் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், காங்கேயம் காளைகள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையானது.

வழக்கமாக தீபாவளிக்கு அடிமாடுகள் எனப்படும் மாமிசத்திற்கு விற்பனையாகும் மாடுகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்தே காணப்பட்டது.

குறிப்பாக கேரள வியாபாரிகள் அதிகளவில் அடிமாடுகளை வாங்கிச்செல்வர். கரோனா காரணமாக அவர்கள் சந்தைக்கு வராததால் அடிமாடுகள் உள்ளிட்ட பிற மாடுகளின் விற்பனையும் குறைந்தே காணப்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய சந்தையில் ரூ.4 கோடி வரை பல்வேறு வகை மாடுகள் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனை நடந்தது. விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு அதிகம் கொண்டுவந்ததால் மாடுகளின் விலையும் குறைந்தே காணப்பட்டது. பல விவசாயிகள் கட்டுபடியாகாத விலை என கூறி விற்பனைக்கு கொண்டுவந்த மாடுகளை திரும்ப அழைத்துச்சென்றனர்.

கேரள வியாபாரிகள் வருகை இருந்திருந்தால் அடிமாடுகள் முதல் கன்றுகுட்டிகள் வரை பல்வேறு மாடுகளை வாங்கிச்செல்வர் என்பதால் விலையும் அதிகரித்திருக்கும். வியாபாராமும் கடந்த ஆண்டுபோல் அதிகளவில் நடந்திருக்கும் என்கின்றனர் விவசாயிகள் மற்றும் மாடு விற்பனையாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x