

கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்தச் செலவில் கான்கிரீட் பாலம் அமைத்துத் தந்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கீழவன்னியூர். இக்கிராமத்தில் இருக்கும் வடபத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழி சேறும், சகதியுமாக உள்ளது. அதனைச் சீரமைத்து கான்கிரீட்டால் ஆன சிமெண்ட் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தேர்தலின்போது தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், தமிழ்வாணன் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, கீழவன்னியூர் வடபத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழி மற்றும் பாலம் குறித்து கிராம மக்கள் அவரிடம் சென்று கோரிக்கை குறித்துக் கேட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடபத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழி சீரமைக்கப்பட்டு, ரூ.45 ஆயிரம் மதிப்பில் சிறிய கான்கிரீட் பாலம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. இது அக்கிராம மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் கூறுகையில், "தேர்தலின்போது கீழவன்னியூர் கிராம மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் வடபத்ரகாளியம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழியைச் சீரமைத்து கான்கிரீட்டால் ஆன சிறிய அளவிலான பாலம் கட்டித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், ஊராட்சியில் நிதி இல்லாததால் பணி செய்யக் காலதாமதம் ஆகிக் கொண்டிருந்தது.
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனது சொந்தச் செலவில் ரூ.45 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட்டால் ஆன சிறிய பாலத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன். வழியையும் சீரமைத்துள்ளேன்" என்றார்.