

புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தொற்றாளர்களுக்கான படுக்கைகள் முற்றிலும் காலியாக உள்ளன. கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் 399 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 687 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவையில் 2,530 பேருக்குக் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், புதிதாக 63 பேருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று (நவ. 09) ஒரே நாளில் புதுவையில் 102, காரைக்காலில் 25, ஏனாமில் 14, மாஹேவில் 4 பேர் என மொத்தம் 145 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுபற்றி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று வெளியிட்ட தகவல்:
"புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 900 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 399 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
34 ஆயிரத்து 212 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 95.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தொற்றாளர்களுக்கான படுக்கைகள் முற்றிலும் காலியாக உள்ளன.
புதுவையில் 471, காரைக்காலில் 111, ஏனாமில் 31, மாஹேவில் 74 பேர் என 687 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் நேற்று ஒரு மூதாட்டி தொற்றால் இறந்ததால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது".
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.