

பாம்பன் கடற்பகுதியில் நிலவி வரும் கடல் சீற்றத்தினால் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 106 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் ராமேசுவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்குப்பட்டுள்ள தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளதால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டு ராமேசுவரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் பாம்பன் கடலின் மீது இரு வழிப்பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. கரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்ட பணிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.
தற்போது பழைய பாலத்திற்கு அருகிலேயே கடலில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் பாம்பன் வடக்கு கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. பாம்பன் வடக்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மிதவைகள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும், மிதவைகள் மூழ்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்த விபத்துக்களினால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்தும் மண்டபத்துடன் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கரோணா பரவல் காரணமாக தினமும் ஒரு ரயில் மட்டுமே ராமேசுவரத்திறகு இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்துகளினால் ஒரு ரயிலும் ராமேசுவரத்திற்கு வந்து செல்லாத முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் புதிய ரயில் பால பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னர் பணிகளைத் தொடர வேண்டும் எனவும் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் பாம்பனில் தொடரும் கடல் சீற்றத்தினால் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தற்காலிகமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் தொடங்கும் எனத்தெரிகிறது.