

ஆண் குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்து அரசு அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (நவ. 09) அந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.காயத்ரி தேவி தலைமையில் 300-க்கும் அதிகமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ள 2,000 மினி கிளீனிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வுடனும், பள்ளி சிறார் நலத் திட்டத்தில் 385 பகுதி சுகாதார செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும்.
சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு தாய்- சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கி துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுநராக பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஆண் பணியாளர்களுக்கு 11.09.1995 முதல் சுகாதார ஆய்வாளர் நிலை 1 வழங்கியதைப்போல், கிராம சுகாதார செவிலியர்களுக்கும் 01.01.1996 முதல் முன்தேதியிட்டு நிலை 1 வழங்க வேண்டும்.
கிராம, பகுதி, சுகாதார செவிலியருக்கு வழங்கப்படும் இருசக்கர வாகன கடனுக்கு வட்டி தள்ளுபடி, 30 சதவீத மானியம் மற்றும் எரிபொருள், பராமரிப்புத் தொகை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான கிராம, பகுதி, சுகாதார செவிலியர்களுக்கு சிறப்பூதியம், பயணப் படி வழங்க வேண்டும்.
ஆண் குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்து அரசு விளம்பரம் செய்து, பயனாளர்களுக்கு உடனடியாக பணப் பயன் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிப் பேசிய சங்கத்தின் மாநில செயல் தலைவர் க.கோமதி, 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறுகையில், "முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு 500 பேர் வீதம் தமிழ்நாடு 2011- 2015 காலக் கட்ட பயனாளிகள் ஏராளமானோருக்கு மகப்பேறு பணப் பயன் இதுவரை முழுமையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை பணப் பயனை உடனே வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூகத்தில் பெண் குடும்ப நல அறுவைச் சிகிச்சை மட்டுமே பெரும்பாலும் நடைபெறுகிறது. பெண்கள் இந்த அறுவைச் சிகிச்சை செய்தால் குறைந்தது 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அவ்வளவு வலி இருக்கும். இதயப் பிரச்சினை, அதிக ரத்த சோகை உள்ள பெண்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பது சிரமம். மேலும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களால் 3 மாதங்கள் விடுப்பு எடுக்க முடியாது.
அதேவேளையில், ஆண்களுக்கு இந்த குடும்ப நல அறுவைச் சிகிச்சை மிக மிக எளிது. ரத்தம் வராது, தழும்பு இருக்காது. சிகிச்சை முடிந்த உடனேயே அவர்கள் எப்போதும்போல் வேலையில் ஈடுபடலாம். எனவே, ஆண் குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்து அதிகளவில் செய்தி, ஊடகங்களில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்" என்றார்.