முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க கன்னியாகுமரி எம்எல்ஏ.,க்கள் முடிவு: பின்னணி என்ன?

முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க கன்னியாகுமரி எம்எல்ஏ.,க்கள் முடிவு: பின்னணி என்ன?
Updated on
2 min read

குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினை, மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்காததால் தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை நாகர்கோவிலில் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க குமரி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் முடிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி நாளை குமரி மாவட்டம் வருகிறார். அவர் பிற்பகல் 3 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அவர்கள் கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், மக்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பலமுறை குரல் கொடுத்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற காரணத்தால் எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து எங்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை. எனவே முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் நாங்கள் பொம்மை போன்று அமர விரும்பவில்லை.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களும் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி, மற்றும் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தும் புற்றுநோய் மையம் அமைக்கப்படவில்லை.

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் கொண்டு வருவதற்கும் தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள் வில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி, மீன்வளக் கல்லூரிகள் அமைத்துத் தரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தலின்போது கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி அமைத்து கொடுக்க வெகுநாட்களாக கோரிக்கை வைத்தும் அதற்கான நடவடிக்கை இல்லை.

சிறந்த நீர்வழிப் பாதையான ஏ.வி.எம். கால்வாயையும் தூர்வாரவில்லை. தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் மறுகட்டமைப்பிற்கான ஏற்பாடுகளும் நடைமுறையில் இல்லை.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக வழங்கவில்லை. நாகர்கோவில் மாநகர பகுதியில் 2013ம் ஆண்டில் தொடங்கிய பாதாள சாக்கடை திட்டம் 8 ஆண்டுகளை கடந்த பின்பும் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது.

குமரியில் ரப்பர் தொழிற்சாலை, ஐடி பார்க் போன்றவை அமைப்பதற்கும் நெடுநாள் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கிள்ளியூர் வட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பின்பும் அங்கு தாலுகா மருத்துவமனை அமைக்கப்படவில்லை.

இதுபோல் பல மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. இதுகுறித்து குமரியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் தொடர் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பெயரளவிற்கு முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் விரும்பாமல் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in