Published : 09 Nov 2020 04:06 PM
Last Updated : 09 Nov 2020 04:06 PM

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 3 மாத கைகுழந்தை கடத்தல்: அலட்சியம் காட்டிய எஸ்.ஐக்கு துணை ஆணையர் மெமோ

சென்னை கோயம்பேட்டில் பழ மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியின் 3 மாத கைக்குழந்தை கடத்தப்பட்டுள்ளது. புகாரில் அலட்சியம் காட்டிய எஸ்.ஐக்கு துணை ஆணையர் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழ மார்க்கெட், மளிகை மொத்தப்பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களில், வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள்.

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வாழை பழம் மொத்த வியாபார கடையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் கூலி வேலைபார்த்து வருகிறார். இவருக்கு சத்யா என்கிற மனைவியும், 3 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ரமேஷ் மனைவி குழந்தைகளை சொந்த ஊரில் கரோனா தொற்று காரணமாக தங்க வைக்காமல் தான் கூலி வேலை பார்த்து வரும்,வாழை பழ வியாபார கடை அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் பழ லோடுகளை இறக்கிவிட்டு, இரவு மனைவி குழந்தைகளுடன் கடை வாசலில் உறங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்க்கும் போது 3 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கணவன் மனைவி இருவரும் பதற்றத்துடன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர்.

ஆனால் குழந்தையை எங்கும் காணவில்லை. உடனடியாக பதைபதைப்புடன் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு ஓடோடிச் சென்று இருவரும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அலட்சியமாக அவர்களிடம் பேசியுள்ளார்.

குழந்தைக்கடத்தல் குறித்து உயர் நீதிமன்றம் மிக கவலையுடன் வழக்கை எடுத்து உத்தரவிட்டதை எல்லாம் மறந்துவிட்டு, குழந்தைக்காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல், உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமல் போய்ய்விட்டு காலையில் வாருங்கள் என அனுப்பியுள்ளார்.

என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்த ரமேஷும் அவர் மனைவி சத்யாவும் ரமேஷ் வேலை பார்த்த இடத்தில் பழக்கமான சமூக ஆர்வலர் சிவராமன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர், குழந்தை புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதை பார்த்த பலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட பலரும் பகிர்ந்துள்ளனர். பகிரும்போது சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சமூக வலைதள கணக்கையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த காவல் ஆணையர் அண்ணா நகர் துணை ஆணையருக்கு உத்தரவிட , உடனடியாக அண்ணா நகர் துணை ஆனையர் ஜவஹர் உத்தரவிட்ட அடிப்படையில் தனிப்படை அமைத்து கோயம்பேடு முழுதும் போலீஸார் தேடியுள்ளனர்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை சேகரிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் குழந்தையை கடத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ரமேஷ் உறங்கிய இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா செயல்படாததால், மற்ற சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் சுற்றி திரியும் திருநங்கை ஒருவர் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்களை நள்ளிரவில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருநங்கையை மூலம் அந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குழந்தையைக் கடத்தியவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏதேனும் பேருந்தை பிடித்து தப்பிச் சென்றிருக்கலாம், அல்லது ஏதாவது வாடகை வாகனத்தை பிடித்து தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால் அந்தக் கோணத்திலும் போக்குவரத்து ஊழியர்கள், வாடகை ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக செயலில் இறங்கி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட கோயம்பேடு காவல் உதவி ஆய்வாளருக்கு அண்ணா நகர் துணை ஆணையர் ஜவஹர் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளார். சமீப காலமாக குழந்தை கடத்தல் விவகாரம் பெரிதாக நடந்தபோது அது குறித்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன், லதா ரஜினிகாந்த் ஆகியோர் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் போலீஸாரை கடுமையாக எச்சரித்தது. குழந்தைக்கடத்தலைத் தடுக்க ஏன் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x