

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி தெரிவித்துள்ளார்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த ஆண்டிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வேயின் பொதுமேலா ளர் வசிஷ்ட ஜோக்ரி தூய்மை பணி களை நேற்று தொடங்கி வைத்தார். கூடுதல் பொதுமேலாளர் ஆர்.வெங்கடசாமி, சென்னை கோட்ட மண்டல மேலாளர் அனுபம்சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மைப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் எழும்பூர், சென்னை கடற்கரை, தாம்பரம், கிண்டி, வேளச் சேரி, மயிலாப்பூர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி மற்றும் பொன் னேரி ரயில் நிலையங்களிலும், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட மற்ற மண்டலங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த மார்ச் மாதம் வரையில் ரயில்வே துறை சார்பில் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ரயில் பெட்டிகளில் எவ் வாறு தூய்மை பணி மேற்கொள் ளப்படுகிறது என்பது குறித்து புகைப் படக் கண்காட்சியும் அமைக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி நிருபர்களிடம் கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து கருத்தரங்குகள், கண்காட்சி கள் மூலம் பயணிகளிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தாம்பரம் 3-வது முனையம்
வரும் தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது தடம் அமைக்கும் பணிகள் 2017-ம் ஆண்டுக்குள் முடிவடையும். ரூ.25 கோடி செலவில் தாம்பரத்தில் 3-வது முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப் பினும் அங்கு நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால், மேலும், ஒரு ஆண்டுக்கு பணிகள் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். ராயபுரத்தில் புதிய முனையம் அமைக்க போதிய இடம் இல்லை. தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால், இது தொடர்பாக பரீசிலிக்கப்படும் என்றார்.