Published : 09 Nov 2020 02:14 PM
Last Updated : 09 Nov 2020 02:14 PM

பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகப் புகார்: விசாரணை நடத்துவதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில் 

சென்னை

பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி, தேசியக்கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல.கணேசன் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். தேசியக்கொடியை பாஜக கட்சிக் கொடிக் கம்பத்தில் முருகன் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஏற்றினால் அது தேசியக்கொடி அவமதிப்பின் கீழ் வரும்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முகப்பேரைச் சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஆஜராகி, “பாஜக கட்சிக் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியது தேசியக்கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவப் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் என்பதால் எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, “அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார் மாம்பலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கில் மாம்பலம் காவல் நிலையத்தினரை எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x