Published : 25 Mar 2014 09:59 AM
Last Updated : 25 Mar 2014 09:59 AM

மும்முனைப் போட்டிதான் தமிழகத்தில் இருக்கும்: பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கருத்து

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மும்முனைப் போட்டிதான் இருக்கும் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைமை அலுவலக மான சென்னை கமலாலயத்துக்கு கட்சியின் செலவுக் குழு திங்கள்கிழமை வந்தது. அக்குழுவினருடன் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தேர்தல் செலவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:

அத்வானி, மோடி வருகை

தமிழகத்தில் பாஜக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று பிரச்சாரம் தொடங்கி யுள்ளது. தொகுதிக்கு ஒன்று வீதம் 39 ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வுள்ளோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்தும், தனித்தனியாகவும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும். தமிழகத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரவுள்ளனர். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடம், தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் காணாமல் போகும்

தமிழகத்தில் நிச்சயம் மும்முனைப் போட்டிதான் இருக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலை யில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசை வீழ்த்துவதுதான் எங்கள் முக்கிய நோக்கம். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். புதுச்சேரி கூட்டணிக்கு நான் பொறுப்பில்லை. அக்கூட்டணி குறித்து புதுச்சேரியும் டெல்லியும்தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மீனவர் கள் பாதுகாப்பு, இலங்கைத் தமிழர் நலன், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவோம். மீனவர் கள் பிரச்சினையில் தமிழக அரசு மீது பழிபோட்டு மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கிறது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.

வேலூர், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவர். அங்கே பெண் வேட் பாளர்களை நிறுத்த எந்தத் தடையும் இல்லை.

ஜஸ்வந்த் சிங் மூத்த தலைவர். ஜூனியர் தலைவரான நான் அவரைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது. அவரது விலகல் ‘மைல்டு ஸ்டோக்’ போன்றது. அதை இதயத்தில் ஏற்பட்ட மாரடைப்பாக கருதக்கூடாது. அது ஒரு சிறிய பிரச்சினைதான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x