

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே தேர்தல் தகராறில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்கள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று (நவ.2) தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி என்.ஜெகவீரபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் காளிதாஸ் (35). அதிமுக பிரமுகரான இவர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது மனைவி ஜெயபாரதியிடம் அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்களான வேல்சாமி மகன் அழகுபாண்டி (52), செல்லப்பாண்டி மகன் அன்புராஜ் (53), செல்லப்பாண்டி மகன் மாரிசாமி (51), நல்லுசாமி மகன் தமிழரசன் (53), தமிழசரன் மகன் சதீஷ்குமார் (32), அழகுபாண்டி மகன் பாண்டீசுவரன் (25), அன்புராஜ் மகன் மனோஜ் என்ற மனோஜ்குமார்(35), செல்லப்பாண்டி மகன் முருகன் (54) ஆகியோர் பணம் கொடுத்து, திமுகவுக்கு ஓட்டு போடுமாறு கூறியுள்ளனர். இதற்கு ஜெயபாரதி மறுத்து விட்டார். இதனால் அவர்கள் ஜெயபாரதியை சத்தம் போட்டு விட்டு சென்று விட்டனர்.
இதனை அறிந்த காளிதாஸ் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து முருகனை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 03.04.2021 அன்று முருகன் உள்பட 8 பேரும் சேர்ந்து காளிதாசை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி அவர்கள் அரிவாள், பனைமட்டை, உருட்டு கட்டையுடன் காளிதாசின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வேன் உள்ளிட்ட 3 வாகனங்களை அடித்து நொறுக்கினர். வேன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர்.
இதனை தடுக்க வந்த காளிதாஸ் மீதும் பெட்ரோலை ஊற்றி, எரிந்து கொண்டிருந்த வேனுக்குள் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த காளிதாஸ் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 08.06.2021 அன்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் காடல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அன்புராஜ், தமிழரசன் ஆகியோர் இறந்து விட்டனர்.
மற்ற 6 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட அழகுபாண்டி, மாரிசாமி, சதீஷ்குமார், பாண்டீசுவரன், மனோஜ் என்ற மனோஜ்குமார், முருகன் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்