

திருப்பூரில் முகக்கவசம் அணிந்து கடைக்குள் வர அறிவுறுத்தியதால், துணிக்கடை ஊழியர்களுக்கும், கடைக்கு வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் குமரன் சாலையில் செயல்படும் துணிக்கடையில் பிரவீன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த எம்.கிஷோர்குமார் (20), எஸ்.சஜித் (21) ஆகிய இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் துணிக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரையும், முகக்கவசம் அணிந்து உள்ளே வருமாறு பிரவீன்குமார் அறிவுறுத்தியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பிரவீன்குமாரை, இளைஞர்கள் இருவரும் சேர்ந்து தாக்க முயன்றனர். இதைக்கண்ட பிரவீன்குமாரின் நண்பர்களான சாமுண்டிபுரம் ஜி.கே.கார்டனை சேர்ந்த கே.ராஜேஸ்வரன் (23), பி.நவாஜ் (27), மாஸ்கோ நகரை சேர்ந்த எஸ்.மகேஷ்குமார் (24) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
இருதரப்பு மோதலில் பிரவீன்குமாரின் நண்பர்கள் மூவரையும் கிஷோர்குமார், சதீஷ் ஆகியோர் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும்பிரவீன்குமாரின் நண்பர்கள்தாக்கியதில் சஜித், கிஷோர்குமாரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார், காயமடைந்த அனைவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருதரப்பு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.