

திருச்சி சுங்கத் துறை அலுவ லக பெட்டகத்தில் இருந்து 34 கிலோ தங்கம் மாயமான வழக்கை விசாரித் துவரும் சிபிஐ போலீஸார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுங்கத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட 24 பேரிடம் நாளை (அக்டோபர் 7) முதல் திருச்சியில் விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.
திருச்சி சுங்கத் துறை அலுவல கத்தில் பெட்டகத்தில் வைக்கப் பட்டிருந்த, கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 கிலோ தங்கக் கட்டிகள் மற் றும் ரூ.17.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரொக்கம் ஆகியவை மாயமானது கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பாக சுங்கத் துறை யினர் அளித்த புகாரின்பேரில் சிபிஐ சென்னை மண்டல கண்காணிப் பாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில் டிஎஸ்பி கண்ணன் தலைமை யிலான குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
இவ்விசாரணையில், பாது காப்புப் பெட்டகத்தில் இருந்த 34 கிலோ தங்கம் மற்றும் ரூ.17.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மாயமானது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 11 பேர், தற்போது பணியாற்றி வரும் 9 பேர் மற்றும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 4 பேர் என மொத் தம் 24 பேரிடம் சிபிஐ டிஎஸ்பி கண்ணன் விசாரணை மேற்கொள்ள வுள்ளார்.
இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் விசாரித்தபோது, கடத்தல் சம்பவத்தில் பறிமுதலாகும் தங்கம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிபதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அதன் எடையளவு, எண்ணிக்கை விவரங்கள் நீதிமன் றத்தின் மூலமே வழங்கப்படும்.
இந்த தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தில் உள்ள விவரங்கள் பாதுகாப்புப் பெட்டக பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் தங்கக் கட்டிகளை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக அதே எடை கொண்ட தங்க முலாம் பூசிய உலோகக் கட்டிகளை பெட்டகத்தில் வைத்திருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சிபிஐ போலீஸாரின் விசாரணைக்குப் பின்னர் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.