

தீபாவளிப் பண்டிகைக்காக புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொதுமக்கள் நேற்று திரண்டனர்.
தீபாவளி வரும் 14-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதற்காக 15 நாட்களுக்கு முன்பே புத்தாடைகள் வாங்க மக்கள் திட்டமிடுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக புத்தாடை, டி.வி. வாஷிங் மிஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை கடந்த சில நாட்களாக சற்று மந்தமாகவே இருந்தது. பஜார் களைகட்டாததால் வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.
தற்போது தீபாவளிக்கு ஐந்து நாட்களே இருப்பதால் மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடைகள் வாங்க விடுமுறை தினமான நேற்று கீழவாசல், விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் திரண்டனர்.
பிளாட்பாரங்களில் ஏராளமான தற்காலிகக் கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ரெடிமேட் ஆடைகள், ஜீன்ஸ் பேன்ட்டுகள், பாய், தலையணை, பிளாஸ்டிக் பொருட்கள், குடைகள், ஆப ரணப் பொருட்கள் விற்பனை செய் யப்படுகின்றன. இவற்றை பொது மக்கள் பேரம் பேசி கணிசமான விலையில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக வில கல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்றுமாறு போலீஸார் மைக் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட், மொபைல் போன், நகை, பணம் திருடும் கும்பலை விளக்குத்தூண், டிஎம் கோர்ட் ஆகிய சந்திப்புகளில் தற்காலிகக் கோபுரங்கள் மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
விளக்குத்தூண், திடீர் நகர் காவல் நிலையங்களில் இருந்து கேமராக்களைப் பயன்படுத்தி எல்இடி டிவி மூலம் போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிக் கின்றனர். தீபாவளிக்கு 5 நாட்களே இருப்பதாலும், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் மதுரையில் தீபாவளி பஜார் களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.