

`தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர் தலில் காங்கிரஸ் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு வராவிட்டால் பதவியிலிருந்து விலகுவேன்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து காங்கிரஸ் சார்பில் மாநாடுகள் நடத்தப் பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தூத் துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல மாநாடு தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் இளங் கோவன் பேசியதாவது:
`மக்களவைத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்தோம். தமிழகத்தில் காங்கிரஸ் இனி இருக்காது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அதையெல்லாம் முறியடித்து கடந்த ஓராண்டில் நாம் எழுந்து வந்துள்ளோம்.
நாட்டில் பேசுவதற்கு, எழுதுவதற்கு, பகுத்தறிவு கருத்துகளை கூறுவதற்கு சுதந்திரம் இல்லை. அதை உண்ணக் கூடாது, இதை உடுத்தக் கூடாது என மோடி அரசு மக்களை நிர்ப்பந்தம் செய்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட கல்விக் கடன் திட்டம், 100 நாள் வேலை திட்டம், மகளிர் குழுக்கள் போன்றவை முடக்கப்பட்டுள்ளன. இதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
துவரம் பருப்பு விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டி விட்டது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய, குறைகளைப் போக்க வேண்டிய தமிழக முதல்வர் கோடநாடு சென்றுவிட்டார். லஞ்சம் ஊழல் பெருத்துவிட்டது. மதுவிலக்கை கொண்டுவர தமிழக அரசு தயாராக இல்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் 6 மாத காலம் இதே வேகத்தோடு உழைத்தால் 2016-ல் மீண்டும் காமராஜர் ஆட்சியை நம்மால் கொண்டுவர முடியும். அவ்வாறு முடியாவிட்டாலும், யார் அந்த ஆட்சியை அமைப்பார்களோ, நமது கொள்கைகளை ஏற்றுக் கொள்வார்களோ, அவர்களது ஆட்சியை நமது ஆதரவோடு ஏற்படுத்த முடியும்.
2016-ல் காங்கிரஸ் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு வராவிட்டால் நான் தலைவர் பதவிக்கே லாயக்கற்றவன். நானே வீட்டுக்குச் சென்றுவிடுவேன்’ என்றார் இளங்கோவன்.