Last Updated : 08 Nov, 2020 07:28 PM

 

Published : 08 Nov 2020 07:28 PM
Last Updated : 08 Nov 2020 07:28 PM

கரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை; முகக்கவசம் அணிவதால் 40% பாதிப்பைக் குறைக்கலாம்: தலைமைச் செயலாளர் தகவல்

கரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் சண்முகம். அருகில் ஆட்சியர் கு.ராசாமணி. | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

கரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை. எனவே, முகக்கவசம் அணிவதால் 40 சதவீதம் பாதிப்பைக் குறைக்கலாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (நவ. 08) நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கோவையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கரோனா தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாளொன்றுக்கு 500 என்றளவில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 200 என்றளவில் குறைந்துள்ளது. கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளும் 38 ஆகக் குறைந்துள்ளன.

இருப்பினும், மாநகராட்சியின் 5 மண்டலங்கள், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. கரோனா இறப்பு விகிதம் 1.27 சதவீதமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 5,000 கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாசிட்டிவ் 3 சதவீதமாக இருந்தாலும், சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.

எனவே, மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்தால் 40 சதவீதம் வரை கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். வரும் காலங்களில் ஊரடங்கை நீட்டிக்க முடியாது. பொது ஊரடங்கு அவசியமில்லை. கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி எப்போது வரும் என்பதைச் சொல்ல முடியாது. கரோனா தொற்று பாதித்த குழந்தைகளைத் தாக்கும் 'மிஸ்-சி' நோய் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது".

இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x