Last Updated : 08 Nov, 2020 07:23 PM

 

Published : 08 Nov 2020 07:23 PM
Last Updated : 08 Nov 2020 07:23 PM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிலை வைத்து வழிபாடு: விவசாயிகள் விநோத அறிவிப்பு

விவசாயிகளுக்கு எதையும் செய்யாத மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது உட்பட விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது என்று அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள், இதைக் கண்டிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குச் சிலை வைத்து வழிபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை (நவ. 08) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கண்டமங்கலம் கிராமத்தில் நிர்மலா சீதாராமனுக்குச் சிலை வைத்து வழிபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலை வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன், "மத்திய அரசு பெரும் பணக்கார முதலாளிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு கடன் தள்ளுபடிகளையும், வட்டிச் சலுகைகளையும் வாரி வழங்குகிறது. ஆனால், விவசாயிகளுக்கு எந்தச் சலுகையும் செய்யவில்லை. மாறாக விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்கள், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உட்பட பல்வேறு காரியங்களைச் செய்து வருகிறது.

விவசாயத்திற்கு 4 சதவீதம் வட்டியில் வழங்கி வந்த பயிர்க் கடனை 9.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தக் கரோனா காலத்திலும், உலகத்திற்கே உணவளித்த விவசாயிகளுக்கு எதையும் செய்யாமல் போனதோடு, பயிர்க் கடனுக்கான வட்டிச் சலுகையைக் கூட அளிக்காமல் இருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என்று நாங்கள் எண்ணுகிறோம். அதனால் அவருக்குச் சிலை வைத்து வழிபடப் போகிறோம். அப்போதாவது மனம் இறங்கி விவசாயிகளுக்கு எதையாவது செய்கிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் பேசிய இளங்கீரன், "காட்டுமன்னார்கோவில் வட்டம் கண்டமங்கலம் கிராமத்தில், நாளை திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சித்திரை நட்சத்திரம் மிதுன லக்கினத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குச் சிலை அமைத்து வழிபாடு நடத்த இருக்கிறோம். எனவே, அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்" என்று விவசாயிகளுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x