

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பினாமியாகச் செயல்படுகிறார் என, பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கட்சிப் பொறுப்பாளர்களுக்கான தொகுதி பயிற்சி முகாம் நேற்றும், இன்றும் (நவ. 8) நடைபெற்றது.
இன்று காரைக்கால் தெற்கு தொகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி.சாமிநாதன் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரையில் புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் இலவச சர்க்கரை உள்ளிட்ட எவ்விதச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 தொகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கொடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.
இதனைக் கண்டித்தும், காரைக்கால் மாவட்டத்தில் உடனடியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2,000 தொகை, இலவச அரிசி வழங்கக் கோரி வரும் 11ஆம் தேதி பாஜக சார்பில், காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரியில் நாளை (நவ. 9) பேரணி, சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் மகளிர் அணி சார்பில் நடைபெறுகிறது.
புதுச்சேரி அரசு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டது. கூட்டணியில் உள்ளவர்களே இந்த அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து புதுச்சேரியில் பாஜக தேர்தல் வேலையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்.
தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரை மூலம் மதக்கலவரம் தூண்டப்படுவதாக புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார். மத்தியில் பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை எந்த இடத்திலும் மதக்கலவரம், குண்டுவெடிப்பு எதுவும் நிகழவில்லை. ஆனால், 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இவையெல்லாம் நாடு முழுவதும் மதத்தின் பெயரால் தூண்டப்பட்டு அடிக்கடி நிகழ்ந்தன. ஒட்டுமொத்த இந்து மக்கள் உரிமைக்காக நடத்தப்படும் வேல் யாத்திரையை வி.நாராயணசாமி கொச்சைப்படுத்தியிருப்பதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பினாமியாக நாராயணசாமி செயல்படுகிறார். காங்கிரஸ் முதல்வராக அல்லாமல் திமுகவின் முதல்வர் போலச் செயல்படுகிறார். புதுச்சேரி மக்கள் ஒட்டுமொத்தமாக நாராயணசாமிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக உள்ளனர். இந்த ஆட்சி எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது.
ஒருபோதும் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் பாஜக மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாது. மதக்கலவரத்தைத் தூண்டாது. இவற்றைச் செய்வது காங்கிரஸ், திமுக கட்சிகள்தான். வளர்ச்சியின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்குகள் கேட்போம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்குச் சமமாக, ஆதரவாகச் செயல்படக்கூடிய இயக்கம் பாஜக மட்டுமே".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்தார்.
கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.அருள்முருகன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.