

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்குப் பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.
யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருப்பதால் அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்டச் செலவினங்களுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதன்படி, கடந்த வாரம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 கோப்புகளில் 19 கோப்புகளுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதில், தீபாவளி, ஓணம் ஆகிய பண்டிகைகளுக்காக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரைக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கும் கோப்புக்கு நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துவோரைத் தவிர மற்ற அனைவருக்கும் இலவச சர்க்கரைக்கான பணம் வழங்க கிரண்பேடி அனுமதி வழங்கியுள்ளார்.
அரசு அச்சகம் மூலம் ஆண்டுதோறும் அச்சிடப்படும் அரசு காலண்டர், டைரி அச்சிடும் பணிக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் அனுமதி கேட்டு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துள்ளார். இந்தக் கோப்பை மத்திய உள்துறையின் முடிவுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.