விருத்தாச்சலம் கிளைச் சிறையில் கைதி மரணம்; நெய்வேலி காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்தச் செல்லும் சிபிசிஐடி போலீஸார்.
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்தச் செல்லும் சிபிசிஐடி போலீஸார்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் காடாம்புலியூர் முந்திரி வியாபாரி மரண வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணையைத் தொடங்கினர்.

காடாம்புலியூரைச் சேர்ந்தவர் முந்திரி வியாபாரி செல்வமுருகன் (39). இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இந்த நிலையில், நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார், கடந்த மாதம் 31ஆம் தேதி நெய்வேலிப் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் செல்வமுருகனைக் கைது செய்துள்ளனர். பின்னர், அவர் கடந்த 1ஆம் தேதி விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவால் செல்வமுருகன் கடந்த 2-ம் தேதி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 4-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் செல்வமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. காடாம்புலியூரில் அவரது உறவினர்கள், போலீஸாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அவரது மனைவி பிரேமா, தனது கணவர் செல்வமுருகனை போலீஸார் அடித்து சித்ரவதை செய்ததால்தான் உயிரிழந்துள்ளார் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கணவர் உடலை வாங்கமாட்டேன் என்றும் கூறி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்தார். இவருக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இன்று (நவ. 8) கடலூர் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார், நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விருத்தாச்சலம் கிளை சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in