

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய மக்களும், பொருளாதாரமும் சந்தித்த சோதனைகள் ஏராளம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இன்று (நவ. 8) பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நான்காம் ஆண்டு நிறைவு நாளில் அதன் பாதிப்புகள் குறித்துப் பேசியதாவது:
"இந்திய வரலாற்றில் 2016 நவம்பர் 8 ஒரு கருப்பு நாளாகும். அன்றுதான் திடீரென்று தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடி தோன்றி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அப்போது, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுகளில் 86 சதவீத நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இந்திய மக்களும், பொருளாதாரமும் சந்தித்த சோதனைகள் ஏராளம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நான்காவது ஆண்டு நிறைவு நாளையொட்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து சமூக வலைதளங்களில் பகிருமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
1. ரூ.15.44 லட்சம் கோடி திரும்ப அரசு கஜானாவுக்கு வரும் என மோடி அரசு தவறாகக் கணக்கிட்டது. கறுப்புப் பண பொருளாதாரத்தை ஜிடிபியின் 25 சதவீதமாக இருக்கும் என நினைத்தனர். ஆனால், அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாகிப் போயின. இதனால் பொருளாதாரப் பேரழிவைத்தான் நாடு சந்தித்தது.
2. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரே இரவில் மேற்கொண்டதால், வங்கிகளின் முன்பு பல மணி நேரம் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
3. லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
4. நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததோடு, ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது. இதன் மதிப்பு ரூபாய் 2.25 லட்சம் கோடி.
5. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியப் பொருளாதாரத்தில் பணமில்லாப் பரிமாற்றத்தைக் கொண்டு வந்ததாகவும் மோடி அரசு பெருமைப்பட்டுக் கொண்டது. இதனைச் சட்டபூர்வக் கொள்ளை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்தார். இதனால் கறுப்புப் பணமும் ஒழியவில்லை. தீவிரவாதமும் ஒழியவில்லை.
6. பண மதிப்பிழப்பு எனும் கொடூர முடிவை எதிர்த்தும், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாபெரும் இயக்கத்தை நடத்தினார்.
7. பண மதிப்பிழந்த மொத்த நோட்டுகள் ரூபாய் 15.44 லட்சம் கோடி. திரும்ப வந்த மொத்தத் தொகை ரூபாய் 15.31 லட்சம் கோடி. திரும்ப வராத தொகை ரூபாய் 13 ஆயிரம் கோடி. ஆனால், புது ரூபாய் நோட்டு அச்சடித்ததற்கான செலவு ரூபாய் 12 ஆயிரத்து 877 கோடி. பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? பிரதமர் மோடி இதுவரை பதில் கூறியதில்லை.
8. கறுப்புப் பணத்தை மீட்டு குடிமக்களின் ஒவ்வொருவரது வங்கிக் கணக்குகளிலும் ரூபாய் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அறிவித்தார். இந்த வாக்குறுதியைக் கடந்த 6 ஆண்டுகளாக மோடி அரசு நிறைவேற்றவில்லை.
9. மோசடிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பெயர்கள், கடன் அளிப்பவர்கள் மற்றும் பரிவர்த்தனை தடயங்கள் ஆகியவற்றைப் பகிரங்கப்படுத்த அரசாங்கம் ஏன் பயப்படுகிறது? வருமான வரித்துறையினர் விசாரித்துள்ள வரி ஏய்ப்பாளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும்.
10. வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து எவ்வளவு கறுப்புப் பணம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரேயொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்புக்குப் பிறகு, இரவு 8.30 மணி அளவில் சூரத்தின் பிரபல நகைக்கடைக்காரர் ரூ.96.3 கோடி அளவுக்கு நகைகளை விற்றுள்ளார். இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? இவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறதே. இது உண்மையா?
இதன்பின்னர், நவம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை, அந்த நகைக்கடைக்காரர் ரூ.110 கோடி வரை வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். ஆனால், ரூ.80 லட்சத்துக்கு மட்டுமே இவர் வரி செலுத்தியுள்ளார். இவருக்கு மத்திய நிதியமைச்சகம் ஏன் சலுகை காட்டியது?
அதேபோல, 2017 டிசம்பர் 8 ஆம் தேதி சேகர் ரெட்டி அலுவலகத்தில் சோதனையிட்ட போது ரூபாய் 33 கோடியே 60 லட்சம் மதிப்பு கொண்ட 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016 நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு, புழக்கத்தில் வந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிடமிருந்து சேகர் ரெட்டிக்குச் சென்றது என்பதை இன்று வரை ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்திய புலனாய்வுத்துறையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கு பின்னாலே இருக்கிற அரசியலை அம்பலப்படுத்த விரும்புகிறேன்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிய பாஜகவினரே அதிமுகவின் தூண்டுதலால் சேகர் ரெட்டியைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபடவில்லை என்று மறுக்க முடியுமா? ஆனால், சேகர் ரெட்டிக்குத் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை.
11. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நான்காவது ஆண்டையொட்டி, இதுகுறித்த வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
12. பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் சந்தித்த சோதனைகளை தமிழ்நாடு காங்கிரஸ் தீவிரப் பிரச்சாரத்தை சமூக ஊடகங்களின் மூலமாக மேற்கொள்கிறோம். மோடி அரசின் தவறான முடிவால் ஏற்பட்ட விளைவுகளை மக்களிடம் கொண்டு செல்வோம்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.