

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வீரமாமுனிவரின் 340-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (நவ. 08) மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்ற நிலையில், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த நிலைதான் 2021இல் வரும்.
இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிமுக சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். கூட்டணி என்ற பேச்சுக்குத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் தற்போதுவரை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.