தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திறக்க மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திறக்க மத்திய அரசு அனுமதி
Updated on
1 min read

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’களை உருவாக்கியது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், மதுரை,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களின் மூலம் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக ஒவ்வொரு மையத்திலும் வழக்கறிஞர், மனநல ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சமையலர் உள்ளிட்டோர் பணியில் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நெல்லை,விழுப்புரம் மாவட்டங்களைப் பிரித்து கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5புதிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டன. இவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் ஏற்கெனவே ‘ஒன் ஸ்டாப் சென்டர்’இயங்கி வருகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் புதிதாக ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திறக்க அனுமதி கேட்டு சமூக நலத் துறையின் சார்பில் மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த சூழலில், புதிய மாவட்டங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன் ஸ்டாப் சென்டர் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இடங்களைத் தேர்வு செய்தவுடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓரிரு மாதங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திறக்கப் படும்’’என்றார்.

இந்த மையம் மூலம் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்படும் ெபண் களுக்கு ஒரே இடத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in