Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

குறைவான கட்டணத்தில் சில விநாடிகளில் கரோனா தொற்றை கண்டறியும் நவீன எலக்ட்ரானிக் கருவி: சென்னை கே.ஜெ. ஆராய்ச்சி மையத்தின் புதிய முயற்சி

குறைவான கட்டணத்தில் சில விநாடிகளில் கரோனா தொற்றைக் கண்டறியும் நவீன எலக்ட்ரானிக் கருவியை, சென்னை கே.ஜெ.ஆராய்ச்சி மையம் உருவாக்கிஉள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜெ.மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பட்டமேற்படிப்புமையத்தின் தலைவர் மருத்துவர் கே.ஜெகதீசன் தலைமையில் மருத்துவர்கள் பால்கொரத், கேசவ்ஜெகதீசன், மோகன்தாஸ், உயிர் மருத்துவ பொறியாளர் அருண், ஆராய்ச்சியாளர் தேஜஸ்வீ, தொழில்நுட்புநர் விக்கிரமன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் மிகவும் குறைவான செலவில், சிலவிநாடிகளில் தோல் மூலம் கரோனாதொற்றைக் கண்டறியும் நவீன எலக்ட்ரானிக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

இந்த நவீன எலக்ட்ரானிக் கருவியை நேற்று அறிமுகம் செய்தமருத்துவர் கே.ஜெகதீசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது உடலில் ஒரு வகையான மின்சாரம் (Zeta Potential) உள்ளது. இந்த மின்சாரம் தோல் மூலம் வெளியே வருகிறது. தோல் மூலம் கரோனா தொற்றைக் கண்டறிய முடியும். ரத்த மாதிரியோ, சளி மாதிரியோ தேவையில்லை. கையுறை அணிந்து கொண்டு கையை கருவியில் வைத்தால், அடுத்த சில விநாடிகளில் உடலில்மின்சாரத்தின் அளவு தெரிந்துவிடும். மின்சாரத்தின் அளவு 20-க்குமேல் இருந்தால் கரோனா தொற்றுஇல்லை என்பதாகும். அதற்கு கீழ்இருந்தால் ஏதோ ஒரு தொற்று இருக்கிறது. 10-க்கு கீழ் இருந்தால் கரோனா தொற்று இருக்கிறது. அதுவே, 5-க்கு கீழ் இருந்தால் தீவிரகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

எனது தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கருவியை உருவாக்கியுள்ளனர். ஒரு கருவியின் விலைரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவேஉள்ளது. மிகவும் குறைவான கட்டணத்தில் பரிசோதனை செய்யலாம். சில விநாடிகளில் முடிவுகள் தெரிந்துவிடுவதால் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை செய்யமுடியும்.

தற்போது 4 தனியார் மருத்துவமனைகள், 2 அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி கேட்கப்படவுள்ளது. காப்புரிமை பெறவும் விண்ணப்பிக்க இருக்கிறோம். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இந்த கருவி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப் படும்.

இவ்வாறு மருத்துவர் கே.ஜெக தீசன் தெரிவித்தார்.

புற்றுநோய் கண்டறியும் கருவி

கரோனா தொற்றைக் கண்டறியும் கருவியைப் போலவே, புற்றுநோயைக் கண்டறியும் நவீன எலக்ட்ரானிக் கருவியை கே.ஜெ.மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும்பட்டமேற்படிப்பு மையம் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியும் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவும் உடலின் மின்சாரத்தை வைத்து கண்டறியப்படுகிறது. கையுறை அணிந்து கொண்டு கையை கருவியில் வைத்தால் உடலின் மின்சாரம் அதிகரித்துள்ள அளவை வைத்து புற்றுநோய் கண்டறியப்படும். கரோனா தொற்று மின்சார அளவு குறைந்துள்ளதை வைத்தும், புற்றுநோய் மின்சாரம் அதிகரித்துள்ளதைக் கொண்டும் கண்டறியப்படுகிறது என்று மருத்துவர் கே.ஜெகதீசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x