Published : 29 Oct 2015 07:28 PM
Last Updated : 29 Oct 2015 07:28 PM

எங்களைப் பார்த்து திமுக காப்பி அடிக்கிறது: அன்புமணி சாடல்

'திமுக எங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறது. விரைவில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று கூட மு.க.ஸ்டாலின் சொல்வார்' என்று பாமக இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை மாவட்ட பாமக புதிய அலுவலக திறப்பு விழா, தி.நகர் பர்கிட் சாலையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது:

"பாமக ஆரம்பித்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக வளர்ச்சி அடைந்துள்ளது. திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியால் ஏற்பட்ட வெறுப்பால் மக்கள் பாமகவை விரும்புகின்றனர். எனவேதான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தோம்.

இதன் தொடர்ச்சியாகவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அப்போது முதல் மக்களை சந்தித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

மத்தியில்தான் நாங்கள் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், மாநிலத்தில் பாமக தலைமையில்தான் கூட்டணி. எங்கள் பலம், கொள்கை இவற்றை நம்பியே களத்தில் இறங்கியுள்ளோம்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதுப்புது உடையணிந்து மக்களை சந்திக்கிறார். திமுக எங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறது. விரைவில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்றுகூட மு.க.ஸ்டாலின் சொல்வார்.

மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக என் மீது அரசியல் பழிவாங்கலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருக்கிறார். தேர்தலுக்கு 6 மாதம் இருக்கும்போதே இரு கட்சிகள் இடையேதான் போட்டி என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. குடிசைகளுக்கெல்லாம் ஸ்டாலின் செல்கிறார். ஆனால், அவை உருவாக அவரது தந்தை கருணாநிதிதான் காரணம்."

இவ்வாறு அன்புமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x