

கோவையில் பழைய கட்டிடங் களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்போது, பல டன் அளவில் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன. மாநகரில் ஒரு மாதத்துக்கு சராசரியாக 100 டன்னுக்கும் அதிகமாக கட்டிடக் கழிவுகள் தேங்குகின்றன. முன்பு இந்த கழிவுகள் பாழடைந்த கிணறுகள் மற்றும் பள்ளங்களை மூட பயன்படுத்தப்பட்டது. தற்போதுஅதிகரித்துவரும் கட்டிடக் கழிவு களை, சம்பந்தப்பட்டவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பொது இடங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, ‘பேவர் பிளாக்’ போன்ற கற்களை தயாரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாததால், மாநகரில் கட்டிடக் கழிவுகள் அதிகளவில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆவாரம் பாளையத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘கட்டிடக் கழிவுகளை கொட்ட மாநகராட்சியின் சார்பில் தற்காலிகமாக 5 மண்டலங்களிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. குறிப்பாக உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலை, உக்கடம் - சுங்கம்பைபாஸ் சாலை, முத்தண்ணன் குளம் சாலை, பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும்போது,‘‘உக்கடத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.9 கோடிமதிப்பில் கட்டிடக் கழிவு மறு சுழற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு டன்னுக்கு ரூ.567 தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இயந்திரங்கள் இறக்குமதி தாமதத்தால் அந்த ஒப்பந்த நிறுவனத்தால் மையத்தை அமைக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது’’ என்றனர்.
கல்லுக்குழிகளில் கொட்ட முடிவு
மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படாத பழைய கல் குவாரிகளில் கல்லுக்குழிகள் ஏராளமாக உள்ளன. மாநகரில் தேங்கும் கட்டிடக் கழிவுகளை அந்த குழிகளில் போட்டு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உதவியுடன் கல்லுக்குழி உள்ள இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டிடக் கழிவுகளை கொட்டும் பணி தொடங்கப்படும். அதே சமயம், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையத்தை விரைவில் அமைக்க, புதிய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.