Published : 21 Oct 2015 11:47 AM
Last Updated : 21 Oct 2015 11:47 AM

சென்னை பெருங்குடி அருகே விபத்து: பறக்கும் ரயிலில் தீப்பிடித்து ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசம்- பயணிகள் குறைவாக இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்ப்பு

சென்னை பெருங்குடி அருகே ஓடும் ரயிலில் திடீரென தீப்பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் சற்று மெதுவாக சென்றதாலும், விடுமுறை நாளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த தாலும் உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டது.

சென்னை அருகே வேளச்சேரி யில் இருந்து கடற்கரைக்கு நேற்று காலை 8.25 மணியளவில் பறக்கும் ரயில் ஒன்று புறப்பட்டது. பெருங்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தொலைவு சென்று கொண்டிருக்கும்போது ரயிலின் நடுப்பகுதி இன்ஜினில் இருந்து தீப்பொறி பறந்தது. புகையும் வெளியேறியது. அதைப் பார்த்ததும் பயணிகள் அலறினர். செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

உடனே, ரயிலை நிறுத்திய ஓட்டுநரும், கார்டும் ரயிலின் நடுப்பகுதிக்கு வந்து தீப்பிடித்த பெட்டியை மற்ற பெட்டிகளில் இருந்து பிரித்தனர். தீயணைப்பு கருவியைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர்.

அதற்குள் தீ மளமளவென பரவி பெட்டி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதற்கிடையே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் காயமின்றி பத்திரமாக வெளியேறிவிட்டனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் ஒரு ரயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் பறக்கும் ரயிலில் பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால் பெரும் விபத்தும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. ஓடும் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது பெருங்குடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்ததும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் ஷர்மா, ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜான் தாமஸ், முதன்மை மின் பொறியாளர் புஸ்பேஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் ஷர்மா நிருபர்களிடம் கூறும்போது, “இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக மூத்த அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரயிலின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ரயில்வே ஐ.ஜி. சீமா அகர்வால், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் ஆகியோரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த ரயில் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து காலை 10.20 மணிமுதல் கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x