

சென்னை காலநிலை செயல்பாட்டு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் இயங்கி வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிபிசிஎல், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், மெட்ராஸ் பெர்ட்டிலைசர் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காற்று மாசு தொடர்பாக சென்னை காலநிலை செயல்பாட்டு குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அந்த தொழிற்சாலைகளில் புகைபோக்கியில் வைக்கப்பட்ட நிகழ்நேர புகை கண்காணிப்பு சாதனங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆன்லைனில் அனுப்பும் தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டது.
அதை ஆய்வு செய்தபோது, பல தொழிற்சாலைகள் அவை இயங்கும் 60 சதவீத நேரங்களில், விதிகளை மீறி புகையை வெளியேற்றி காற்று மாசு ஏற்படுத்தி இருப்பதும், அதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் அடிக்கடி அமோனியா கசிவு ஏற்படும் நிலை உள்ளது. இருப்பினும், ஓராண்டில் 71 சதவீத நேரங்களில் அமோனியா வெளியேற்றத்தைக் கண்காணிக்கத் தவறியுள்ளது. போபால் விஷவாயு போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அமிலத்தன்மை கொண்ட ஹைட்ரஜன் புளூரைடு வாயு வெளியேற்றமும் 62 சதவீத நேரங்களில் கண்காணிக்கப்படவில்லை. ஹைட்ரஜன் புளூரைடு வாயு வெளியேற்றத்தை கண்டுகொள்ளாது விட்டுவிட்டால் அல்லது முன்னெச்சரிக்கை கட்டமைப்பு இயங்கவில்லை என்றால் மிகப் பரந்த அளவிலான அழிவு ஏற்படும். வல்லூர் அனல் மின் நிலையத்தில், ஆண்டின் 82 சதவீத நேரங்களில் நச்சு வாயுவான சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்றம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந்தது.
ஏற்கெனவே பல தொழிற்சாலைகளால் மாசுபட்டு வரும் மணலி, எண்ணூர் பகுதிகளில் இதற்கு மேல் புதிய ஆலைகளை நிறுவவும், ஏற்கெனவே உள்ள ஆலைகளை விரிவுபடுத்தவும் தடைவிதிக்க வேண்டும். விதிகளை மீறும் ஆலைகள் மீதும், விதிமீறல்களை கண்டுகொள்ளாத மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.