திருக்கழுக்குன்றம் ஒன்றியம் இரும்புலிச்சேரியில் பழுதடைந்த பாலாற்று பாலத்தை சீரமைக்க ஆட்சியர் நடவடிக்கை

இரும்புலிச்சேரியில் சேதமடைந்த பாலாற்றுப் பாலத்தை சீரமைப்பது தொடர்பாக செங்கை ஆட்சியர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இரும்புலிச்சேரியில் சேதமடைந்த பாலாற்றுப் பாலத்தை சீரமைப்பது தொடர்பாக செங்கை ஆட்சியர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே வனப்பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைப்பது மற்றும் பாலாற்று பாலத்தை சீரமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கழுக்குன்றத்தில் இருந்துபொன்விளைந்தகளத்தூர் செல்லும் சாலையில் சாலூர் முதல் பொன்பதர்கூடம் வரை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை காட்டாங்கொளத்தூர் ஒன்றியப் பராமரிப்பில் உள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலையைதான் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் திருக்கழுக்குன்றம் -பொன்விளைந்த களத்துார் சாலையானது பொன்பதர்கூடம் - சாலுார்வரை வனத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலையை சீரமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்தாலும், வனத் துறையின் அனுமதி கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அந்த வழியாக செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இது தொடர்பாக ஆட்சியர் ஜான்லூயிஸிடம் இப்பகுதி மக்கள்கோரிக்கை மனு வழங்கியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து செங்கை ஆட்சியர் பழுதடைந்த சாலையைநேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் இரும்புலிச்சேரியில் சேதம் அடைந்த பாலாற்று பாலத்தை சீரமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in