

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளிப் பல்லக்கில் இருந்து 2 கிலோ வெள்ளி மாயமாகியுள்ளது. இது மிகவும் பழமையான வெள்ளிப் பல்லக்கு என்பதால், எப்போது காணாமல் போனது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வெள்ளிப் பல்லக்கு திருடுபோய்விட்டதாக அந்தக் கோயிலின் பக்தர் டில்லிபாபு சிவகாஞ்சி காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஏற்கெனவே ஏகாம்பரநாதர் கோயில் நகைகள் குறித்து அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கணக்கெடுத்தனர். தற்போது வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுத்து வருகின்றனர்.
அப்போது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட வெள்ளிப்பல்லக்கு, மேல் தகடுகள் பெயர்ந்த நிலையில் ஒருஅறையில் இருந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளித் தகடுகளை எடை போட்டு பார்க்கும்போது, 11 கிலோ இருக்க வேண்டிய வெள்ளித் தகடுகள் 8 கிலோ அளவுக்கு மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. ஏறக்குறைய 2 கிலோவுக்கு அதிகமான வெள்ளி மாயமாகியுள்ளது.
இந்த வெள்ளிப்பல்லக்கு பல நூறு ஆண்டுகள் பழமையானது. இதில் அதிநுட்பமான சிற்பங்கள் இருந்துள்ளன. மேலும், இது கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளித் தகடுகள் எப்போது காணமல்போயின என்பது தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, "நான் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இங்குள்ள பொருட்கள் பெரும்பாலும் சரியாக உள்ளன. வெள்ளிப்பல்லக்கில் மட்டும் வெள்ளியின் எடை குறைகிறது. அது மிகவும் பழமையானது. எந்த ஆண்டில் காணமல்போனது என்பது தெரியவில்லை" என்றார்.
வேலூர் உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வுகளின் வெளிப்படைத்தன்மையை காட்டும் வகையில்,எந்த இடையூறும் இல்லாமல்செய்தியாளர்கள் இந்த ஆய்வைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னரே எவ்வளவு பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பது தெரியவரும்.
இந்த வெள்ளிப்பல்லக்கு பல நூறு ஆண்டுகள் பழமையானது. இதில் அதிநுட்பமான சிற்பங்கள் இருந்துள்ளன. மேலும், இது கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.