மீனவர் கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டில் தொடங்கும் மீன்வளத் துறை அதிகாரி தகவல்

மீனவர் கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டில் தொடங்கும் மீன்வளத் துறை அதிகாரி தகவல்

Published on

தமிழகத்தில் வசிக்கும் மீனவர்களை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 லட்சத்து 29 ஆயிரம் கடலோர மீனவர்களும், 2 லட்சத்து 35 ஆயிரம் உள்நாட்டு மீனவர்களும் உள்ளனர். இவர்கள் மீன்பிடிப்பு, மீன் விற்பனை, இறால் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம், மீன்பிடி குறைந்த கால நிவாரணம், மானிய விலையில் மீன் விற்பனை செய்வதற்கான உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு விபத்து, கல்வி உள்ளிட்ட உதவி தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, தற்போதைய சூழலில் மீனவ மக்கள் தொகையை கண்டறிய புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் மீனவர்களை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு மீன்வளத் துறை, கோப்பு அனுப்பி வைத்துள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழகத்தில் வசிக்கும் மீனவர்களை கணக்கெடுக்கும் பணிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஒவ்வொரு மீனவர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும். அதன் அடிப்படையில் மீனவர்களுக்குரிய திட்டங்களும் வகுக்கப்படும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in