Published : 13 Oct 2015 13:27 pm

Updated : 13 Oct 2015 13:32 pm

 

Published : 13 Oct 2015 01:27 PM
Last Updated : 13 Oct 2015 01:32 PM

எழுத்தாளர்கள் எதிர்ப்புக்கு மவுனம்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கண்டனம்

மத வன்முறை அதிகரிப்பு, சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிராக, எழுத்தாளர்கள் பலரும் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்து வரும் நிலையில். அதுகுறித்து விளக்கமோ பதிலோ அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச் சிறந்த கன்னட எழுத்தாளருமான எம்.எம். கல்புர்கி, தீவிரவாதிகள் சிலரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்ததும் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், அதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை நான் தெரிவித்திருந்தேன்.


உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சியை சமைத்துச் சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட முதியவர் இக்லாக்கின் குடும்பத்திற்கு அந்த மாநில முதல்வர் 45 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென்று அறிவித்தார்.

எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி, சமூக ஆர்வலர்களும், பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுமான கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மறைந்த இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சகோதரியும், ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவருமான விஜயலட்சுமி பண்டிட்டின் மகளும், பிரபல எழுத்தாளருமான நயன்தாரா சேகல், சமூகத்தில் மாறுபட்ட கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம் குறைந்து வருவதாலும், அவ்வாறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனக்கு 1986ஆம் ஆண்டு ரிச் லைக் அஸ் என்ற ஆங்கில நாவலுக்காக வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை 6-10-2015 அன்று திருப்பியளித்தார்.

செய்தியாளர்களிடம் இவர் கூறும்போது, எழுத்தாளர்கள் கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள். மதத்தின் முரண்பாடுகள் அல்லது மூட நம்பிக்கைகள் குறித்து புரட்சியாளர்கள் கேள்வி எழுப்பினால் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சில சமயம் கொல்லப்படுகிறார்கள். கருத்து வேறுபாடுகளைத் தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசுவதில்லை என்றும் சேகல் குற்றம்சாட்டியிருந்தார்.

நயன்தாரா சேகலைப் பின்பற்றி, லலித் கலா அகாடமியின் முன்னாள் தலைவரும், கவிஞருமான அசோக் வாஜ்பாய் அவர்களும் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளித்தார்.

பகுத்தறிவாளர்கள் கொலை, தாத்ரி சம்பவம் ஆகியவற்றில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பதாக இவர் கூறினார். மேலும் அவர், எழுத்தாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதில் சாகித்ய அகாடமி தவறிவிட்டதாகச் சுட்டிக் காட்டினார்.

இவர்களைத் தொடர்ந்து பிரபல பெண் எழுத்தாளர் சசி தேஷ்பாண்டே, எம்.எம். கல்புர்கி கொலை செய்யப்பட்ட பிறகு, சாகித்ய அகாடமி அமைதியாக இருந்தது தனக்கு ஏமாற்றம் அளித்ததாகக் கூறி அதன் பொதுக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தாத்ரி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல உருது எழுத்தாளரான ரஹ்மான் அப்பாசும், தனக்கு அளிக்கப்பட்ட உருது மொழிக்கான சாகித்ய அகாடெமி விருதை அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

எழுத்தாளர்கள் சந்திரசேகர பாடீல், உதய் பிரகாஷ், நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பாய், உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ், ஆகியோரைத் தொடர்ந்து பிரபல மலையாள நாவலாசிரியை சாரா ஜோசப்பும் சாகித்ய அகாடமி விருதினை அரசுக்குத் திருப்பி அனுப்பப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய நாவலுக்கு 2003ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதையும், அதனுடன் வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையையும் திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் குர்பஜன் புல்லார், அஜ்மிர் சிங் ஆலுக், ஆதம்ஜித் சிங் ஆகியோரைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பிரபல எழுத்தாளர் கணேஷ் தேவி, அமன் சேட்டி, கன்னட எழுத்தாளர் கும் வீர்பத்தி ரப்பா, காஷ்மீரைச் சேர்ந்த சுஜாத் புகாரி ஆகியோரும் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்கள். இந்தப் பட்டியல் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே உள்ளது.

சாகித்ய அகாடமியின் பொதுக் குழு, செயற்குழு, நிதிக் குழுக்களில் அங்கம் வகித்து வந்த கவிஞர் சச்சிதானந்தன் தனது அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்திருக்கிறார். அதற்குக் காரணமாக, “எழுத்தாளர்களுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆதரவு அளிக்க அகாடமி தவறி விட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு சாகித்ய விருது பெற்ற மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் அளித்த பேட்டியில், இன்னும் ஓரிரு நாட்களில் சாகித்ய அகாடமி நல்ல தொரு முடிவு எடுக்காவிட்டால், தான் பெற்ற சாகித்ய விருதை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

சிறுகதை எழுத்தாளர் பி.கே. பாரக்கடவு, சாகித்ய அகாடமி பொதுக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து தான் உடனடியாக விலகுவதாக கூறியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி விருதுகளை இவ்வாறு எழுத்தாளர்கள் திருப்பித் தருவதற்கு புக்கர் பரிசு பெற்ற புகழ் மிக்க எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பதினாறு பேர் இதைப் பற்றிக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் பிறகு பிரதமர் மோடியிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தோ எந்தவிதமான விளக்கமோ, பதில் அறிக்கையோ இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

அரசியலுக்கும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று கருதாமல், பொதுவாக கருத்துச் சுதந்திரத்தை காப்பதே ஜனநாயகக் கோட்பாடு தான் என்ற கருத்தோடு மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும்.

சாகித்ய விருது பெற்ற பலரும் விருதுகளைத் திருப்பியனுப்பி வருவது குறித்து ஏதாவது கருத்து கூறினால், மத்திய அரசுக்கு வருத்தம் வந்து விடுமோ என்று சாகித்ய அகாடமி நிர்வாகம் கருதுவதாகவே தெரிகிறது. எனினும் வரும் 23ஆம் தேதியன்று சாகித்ய அகாடமி தனது அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதாக இன்று செய்தி வந்துள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு, பதவிக்கு வந்த போது, பழைய இந்துத்துவா பாதையிலிருந்து விலகியிருப்பார்கள் என்று பரவலாகக் கருதப்பட்டாலும், அண்மைக் கால நிகழ்வுகளையும், நடவடிக்கைகளையும் காணும்போது, பொறுப்பிலே இருப்போர், கருத்து தெரிவித்திட வேண்டிய கட்டாயம் நேரும் போது கூட வாய் மூடி மௌனிகளாக, கண்டும் காணாத நிலையிலே தான் நடந்து கொள்கிறார்கள் என்பது நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் மீதும், நீண்ட காலமாக இந்தியாவில் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வரும் பன்முகப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீதும், தாக்குதல் நடத்தப்படுவதும், அதைத் தடுத்து நிறுத்திடும் அதிகாரம் படைத்தோர் நமக்கென்ன? என்று இருப்பதும் அநீதி மட்டுமல்லாமல்; வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகவும் ஆகி விடும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.எழுத்தாளர்கள் எதிர்ப்புமோடி மவுனம்கண்டிக்கத்தக்கதுகருணாநிதிஅறிக்கைகண்டனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x