திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிக்கு எதிரானது- மதுரை உயர் நீதிமன்றம் கருத்து
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் நடந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக் தியோடர். ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தார். அவர் டில்லியில் வசிக்கும் தமிழ் பெண்ணை காதலித்தார். இருவருக்கும் 2007 செப்டம்பர் 7-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் தியோடருக்கு எதிராக அந்தப் பெண் ஒரு புகார் அளித்தார். அதில், நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு கார்த்திக் அழைப்பின்பேரில் சிட்னி சென்றதாகவும், அங்கு இருவரும் 6 மாதம் கணவன், மனைவியாக வாழ்ந்தாகவும், பின்னர் கார்த்திக் திருச்சிக்கு வந்து வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உறவு வைத்திருந்த கார்த்திக் தியோடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின்பேரில், திருச்சி மகளிர் போலீஸார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்றம் கார்த்திக் தியோடருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.என். பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு சம்பவம், ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அங்கு நடந்த சம்பவத்துக்கு இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது. தண்டனையும் வழங்க முடியாது. அப்படி வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால், மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை.
இந்தியப் பெண்ணாக இருந்துகொண்டு, திருமணம் நிச்சயமான நிலையில் மனுதாரருடன் எப்படி சேர்ந்து வாழ்ந்தார் எனத் தெரியவில்லை. திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் மனுதாரருக்கு, திருச்சி மகளிர் நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
