Published : 07 Nov 2020 08:17 PM
Last Updated : 07 Nov 2020 08:17 PM

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறிய பாஜக தலைவர் முருகனுக்கு நன்றி: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறிய பாஜக தலைவர் முருகனுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நவ‌.11-ம் தேதி முதல்வர் வருகை குறித்து வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை வகித்து பேசினார்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜிமற்றும் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கரோனா பரிசோதனையில் அதிகப்படியான பரிசோதனை செய்த மாவட்டம் தூத்துக்குடி தான். அதேபோல், கரோனா தாக்கத்தால் இறப்பு சதவீதமும் குறைவாக உள்ள மாவட்டமும் தூத்துக்குடி தான்.

கரோனா தடுப்புப் பணியில் மிகச்சரியாக செயல்பட்டு மக்களைப் பாதுகாத்த நிர்வாகமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

நவ.11-ம் தேதி நடைபெறும் கரோனா தடுப்புப் பணி ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

கோவில்பட்டி விளாத்திகுளம் தொகுதிகளில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டங்களையும் அறிவிக்க உள்ளார். மேலும், அந்தக் கூட்டம் கரோனா தடுப்புப் பணிகளைப் பாராட்டும் நிகழ்ச்சியாக அமையப்போகிறது.

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே முரண்பாடு உள்ளது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அரசியலாக பார்க்கக் கூடாது.

தமிழர்கள் என்ற உணர்வுடன் பார்க்க வேண்டும். அவர்களை ராஜிவ் காந்தி குடும்பத்தினரே மன்னித்துவிட்டனர். அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரும் இதனை காங்கிரஸ் அரசியலாக்க நினைப்பது நல்லதல்ல. அது நடக்கக் கூடாத சம்பவம். உலகம் முழுவதும் கண்டிக்கக் கூடிய சம்பவம்தான்.

அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இது உணர்ச்சிகரமான பிரச்சினை. ஆளுநர் தற்போது டெல்லி சென்றுள்ளார். இது போன்ற விஷயங்களை மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

கூட்டணி ஆட்சிதான் அமையும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என பாஜக தலைவர் முருகன் கூறியிருப்பது அவர்களது விருப்பம். அவர்களது விருப்பத்துக்கும் ஆசைக்கும் யாரும் தடைபோட முடியாது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நேரத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கான தேவை இருக்காது என்ற சூழலில் தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம்.

தேர்தல் முடிவும் அப்படித்தான் வரும். அதிமுக ஆட்சி அமையும் என்று கூறியதற்காக பாஜக தலைவர் முருகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மந்திரி சபையில் இணைய வேண்டும் என கேட்டுள்ளார். அதனை அதிமுக தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x