Published : 07 Nov 2020 07:50 PM
Last Updated : 07 Nov 2020 07:50 PM

தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டு அதையே ஆள நினைப்பதைப் போன்ற துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது: அதிமுக மீது ஸ்டாலின் விமர்சனம்

தமிழினத்தை, மீண்டும் கல்வியில்லாத, வேலைவாய்ப்பில்லாத சமூகமாக மாற்றுவதற்கான சதியை முறியடிப்பதற்கான ஜனநாயகப் போர்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 7), வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்குக் காணொலி வாயிலாகத் தலைமையேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் முழுமையான வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.

ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கத் தகுதி இல்லாத அரசுதான் எடப்பாடி பழனிசாமி அரசு. பழனிசாமி முதல்வராக இருக்க வேண்டும், அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைத்து நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா சிறைக்குப் போனதால், ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் போனதால், முதல்வர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஏறி வந்த ஏணியை எட்டி மிதித்துத் தள்ளுவதைப் போல சசிகலாவையே தூக்கி எறிந்த பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீது பற்றோ, பாசமோ இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

காபி 'கப்'பைத் தூக்கிப் போடுவதைப் போல மக்களைத் தூக்கி எறியக் கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதனை அவரது ஒவ்வொரு நடவடிக்கை மூலமாகவும் உணரலாம்!

தமிழ்நாட்டில் எந்தத் தரப்பு மக்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லை! தமிழ்நாட்டின் எந்த உரிமைக்காவது பழனிசாமி குரல் கொடுத்துள்ளாரா? கிடையாது. தமிழ்நாட்டுக்கு எந்தச் சலுகையாவது வாங்கித் தந்தாரா? அதுவும் இல்லை. தமிழகத்துக்கு எந்தப் புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? கிடையாது. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய வைக்கவில்லை. இதைத்தான் பார்க்கிறோம்.

ஆனால், மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை என்னால் வரிசையாகப் பட்டியலிட முடியும். இவை அனைத்தையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால்தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு, தமிழ்நாட்டை ஆள நினைப்பதைப் போன்ற துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழர்கள் தங்கள் எதிரியைக் கூட மன்னிப்பார்கள். ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். அத்தகைய துரோகக் கூட்டத்தின் கையில் கோட்டை சிக்கி இருக்கிறது.

பாஜக அரசு எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கையா?

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு செய்துள்ள துரோகத்தை மட்டும் சொல்கிறேன். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அதிமுக ஆதரிக்கிறது. குடியுரிமைச் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் இருக்க முடியுமா? சிறுபான்மைச் சமூகத்தினருக்கு இதை விட வேறு துரோகம் செய்ய முடியுமா?

'காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்கிறார்கள். 'இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது' என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

ஜெயலலிதாவின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றி விட்டீர்களா? நிறைவேற்றத் தயாரா?

1999ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்' என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பேசி இருக்கிறார். ஆனால், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் எதிர்த்துப் பேசி இருக்கிறார். ஒரே நேரத்தில் மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாட்டையும், மக்களவையில் வேறொரு நிலைப்பாட்டையும் அதிமுக எடுத்துள்ளது. இதுதான் அதிமுகவின் கொள்கையா?

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துகளுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம்.

அந்தக் குடியுரிமைச் சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போல கேட்டார் முதல்வர். அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல் முதல்வர் அப்படிச் சொன்னார்.

இப்படித்தான் கரோனாவால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னார் முதல்வர். ஆனால், தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். அதைப் போலத் தான் குடியுரிமைச் சட்டமும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பறித்திருக்கும். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கவில்லை. இப்படி தொடந்து மக்கள் விரோதியாகச் செயல்பட்டு வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி.

'பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி' என்று அண்ணா எழுதினார். அதைப் போல இரண்டு நாக்குகள் மட்டுமல்ல; இருபது நாக்குகளை வைத்துள்ளது அதிமுக.

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு என்பார்கள். ஆனால், புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பார்கள்! நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் போடுவார்கள். ஆனால், மத்திய அரசு அந்தச் சட்டத்துக்கு அனுமதி தர மறுத்தால் எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். 7.5 சதவீத மசோதாவை நிறைவேற்றுவார்கள். ஆனால், ஆளுநரை நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்பார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கான தீர்மானம் போடுவார்கள். ஆளுநர் அதற்குக் கையெழுத்துப் போடாமல் ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தாலும் வாயைத் திறந்து கேட்க மாட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசிடம் இருந்து பறித்துச் செல்ல அனுமதிப்பார்கள். ஆனால், அப்படி அனுமதிக்கவில்லை என்று மழுப்புவார்கள்.

இந்த ஆண்டே மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தேவை என்று வழக்குப் போடுவார்கள். ஆனால், மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதனைச் சொல்ல மாட்டார்கள்.

காவிரி ஆணையத்திடம் கோரிக்கை வைப்பார்கள். அந்த ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பார்கள். இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை நாக்கு அல்ல, இருபது நாக்குகள்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சமூக நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் மதவாத சக்திகளால் நடத்தப்படும் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் மாவீரர்களைப் போல கர்ஜித்த அதிமுக அரசு, அடுத்த நாளே மண்டியிட்டு பச்சைக் கம்பளம் விரித்ததன் மர்மம் என்ன? அனுமதி இல்லை, உண்டு என இரண்டு வேஷத்தையும் ஒரே நேரத்தில் போட்டது பச்சோந்தித் தனம் அல்லவா?

எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை முழுக்க அடமானம் வைத்துவிட்டார். அப்படி அடமானம் வைக்கப்பட்ட தமிழகம் மீட்கப்பட வேண்டும்!

தலைவர் கருணாநிதி, தமிழகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் பார்த்துப் பார்த்து சலுகைகளைச் செய்தார்.

ஆனால், அதிமுக அரசு, ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் இதுபோல் அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து வருகிறது. துரோகக் கூட்டத்தை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் துடிக்கிறார்கள்.

எந்தத் திட்டங்களும் இல்லை. அவர்கள் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வது எதுவும் சாதனை அல்ல. மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்துவிட்டதாக பழனிசாமி சொல்கிறார். அது பற்றி வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டேன். எந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன, எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். அதைக்கூடக் கொடுக்கவில்லை. அவர்களால் எந்தச் சாதனையைக் காட்ட முடியும்?

இவர்களது சாதனையை ஒவ்வொரு மாவட்ட மக்களும், ஒவ்வொரு தொகுதி மக்களும் பட்டியல் போட்டாலே, இவர்கள் செய்தவை வெளிச்சத்துக்கு வந்துவிடும்! உங்கள் மாவட்டத்தையே உதாரணமாகக் காட்டுகிறேன்!

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளையாவது ஒழுங்காக முடித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நாசம் செய்துவிட்டார்கள். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை என்பதற்காகவே கிடப்பில் போட்டுவிட்டார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவும் இல்லை. இதுதான் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சி.

மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வழியில் பணம் வருமோ அந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி கொள்ளைகளை அடிக்கிறார்கள். இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட வேண்டாமா? இந்தப் பத்தாண்டுக் காலத்தில் தமிழகம் எல்லா வழியிலும் பின்தங்கிவிட்டது. இதனை மீட்டு மீண்டும் நம் பழம்பெருமையைப் புதுப்பித்தாக வேண்டும்.

'தமிழருடைய கலை, கலாச்சாரம், நாகரிகம், இலக்கியம், வரலாறு இவை எல்லாம் காப்பாற்றப்பட திமுக இருந்தாக வேண்டும்' என்றார் அண்ணா.

தமிழர்களின் கலைக்கு ஆபத்து வந்துவிட்டது. கலாச்சாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் இந்தியைத் திணிக்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக தமிழைப் புறக்கணிக்கிறார்கள், அழிக்கப் பார்க்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்பதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அனைவருக்கும் வேலை என்பதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். இன்னும் சொன்னால் இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவை ஒற்றை மதம், ஒற்றை இனம், ஒற்றை மொழி கொண்ட நாடாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனை இப்போது தடுத்தாக வேண்டும். இப்போது தடுக்காவிட்டால் எப்போதும் தடுக்க முடியாது.

மீண்டும் கல்வி இல்லாத, வேலை இல்லாத சமூகமாக தமிழினத்தை மாற்றும் சதியை ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. அந்தச் சதிக்கு தமிழ்நாட்டு அரசு, இந்த அதிமுக ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தேர்தல் என்ற ஜனநாயகப் போரால் தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது.

உங்கள் மாவட்டத்தின் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுக் கொண்டுவந்து, உங்கள் திருக்கரங்களினாலே எனது கைகளிலே வழங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து, வாழ்நாள் முழுதும் ஓய்வே இல்லாமல் உழைத்த நமது தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நினைவிடத்திற்குச் சென்று, அந்த வெற்றியைக் காணிக்கையாகச் செலுத்திக் களிப்புறுவோம்.

வேலூர் கோட்டையில் துப்பாக்கியாலும் வாள்களாலும் புரட்சி நடந்தது. அது ஒரு காலம். இன்று மக்கள் நடத்த வேண்டியது ஜனநாயகப் புரட்சி. 'நமது பாதை வேட்டு முறையல்ல, ஓட்டு முறை' என்றார் அண்ணா. ஓட்டு முறையால், அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகம் இழந்த பெருமையை மீட்போம்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x