Published : 13 Oct 2015 08:05 PM
Last Updated : 13 Oct 2015 08:05 PM

மின்துறை ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

‘மின்துறையில் பணிபுரிகிற ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை போன்ற மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிற தீபாவளி கருணைத் தொகையை, சமீப காலமாக ஒரு சிலருக்கு வழங்கியும், பலருக்கு வழங்காமலும் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பணி நிரந்தரம் வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவோ போராடியும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தீபாவளி கருணைத் தொகை போன்ற ஆறுதலைக் கூட கொடுக்க மறுப்பது என்ன நியாயம்? அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி தீபாவளி கருணைத் தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும்.

தமிழக மின்சாரத்துறையில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தில் மறைமுகமாக எவ்வளவோ ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 54 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தாங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்த அவர்கள், பணி நிரந்தரத்துக்கான ஆணையையும் பெற்றனர்.

ஆனால், அதனை அரசு செயல்படுத்தவில்லை. அதனால், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைப்போல், எத்தனையோ ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். எனவே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றில்லாமல், அத்தனை ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய மின் துறை அமைச்சர் முன்வர வேண்டும். இல்லையெனில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை சார்பில் எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x