Last Updated : 07 Nov, 2020 06:20 PM

 

Published : 07 Nov 2020 06:20 PM
Last Updated : 07 Nov 2020 06:20 PM

இளநிலை மருத்துவப் படிப்பு விண்ணப்பம்; சான்றிதழ் தொடர்பாக விதியில் தளர்வு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது உரிய சான்றிதழ் இணைக்கப்படாவிட்டாலும்கூட கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டுவரலாம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் இன்று (நவ. 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் 153 பேருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

"தீபாவளிப் பண்டிகையையொட்டி கடை வீதிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனினும், பண்டிகை முடியும் வரை நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். சுயக்கட்டுப்பாடுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

பொதுவாக, அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் எப்போதுமே தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் டெங்குவின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. ஆனால், நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையோடு சேர்த்து எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அனைத்துத் தொற்று நோய்களின் தாக்கமும் குறைந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கு 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 27 ஆயிரத்து 400 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது உரிய சான்றுகள் இணைக்கப்படாவிட்டாலும் கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டு வரலாம் என்று விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதில் திருத்தம் இருந்தால் மெயில் மூலம் தகவல் அனுப்பினால் திருத்தம் செய்துகொள்ளலாம். 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x